பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு சிறப்பு டிஜிபி, எஸ்பி மீது குற்றச்சாட்டுகள் பதிவு: 11ம் தேதி விழுப்புரம் கோர்ட்டில் சாட்சி விசாரணை தொடக்கம்

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தபோது  சிறப்பு டிஜிபி தரப்பில் கோரப்பட்ட, வழக்கு தொடர்பான ஆவணங்கள், சிசிடிவி காட்சி பதிவுகள் ஆகியவற்றை சிபிசிஐடி போலீசார் பென்டிரைவில் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து 8ம் தேதிக்கு (நேற்று) வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்பதால் டிஜிபி, எஸ்பி ஆகிய இருவரும்  கட்டாயம் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று  காலை இவ்வழக்கு விசாரணை நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் நடந்தது. அப்போது  சிறப்பு டிஜிபி, எஸ்பி கண்ணன் ஆகியோர் ஆஜரானார்கள். இருவரிடமும் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர் மழையின் காரணமாக ஒரு வாரம் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு  நீதிபதி ஒத்திவைத்தார். அன்றையதினம் பாதிக்கப்பட்ட தரப்பில் சாட்சிகள் விசாரணை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

* பெண் எஸ்பி, கணவருக்கு சம்மன்

இந்த வழக்கில் முதல் சாட்சியும், புகார்தாரருமான பெண் எஸ்பி மற்றும் 2வது சாட்சியான அவரது கணவர் ஆகிய  இருவரும் சாட்சி விசாரணைக்கு 11ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பும்படி,  சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

More