ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இத்தாலி நிறுவனம் மீதான தடையை நீக்கியது ஏன்? காரணம் கேட்கிறது காங்கிரஸ்

புதுடெல்லி: கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது விவிஐபிகளுக்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க, இத்தாலியின் பின்மெக்கானியா நிறுவனத்தின் இங்கிலாந்து துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை பெற இந்தியாவை சேர்ந்த சிலருக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ரூ.450 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக பாஜ கட்சியினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பின்மெக்கானியா நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், அந்நிறுவனத்திடம் இருந்து ராணுவ தளவாடங்களை மீண்டும் கொள்முதல் செய்யும் விதமாக கருப்பு பட்டியலில் இருந்து பின்மெக்கானியா நிறுவனத்தை பாதுகாப்பு அமைச்சகம் நீக்கி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பதிவில், ‘‘அந்நிறுவனத்தை ஊழல் நிறுவனம் என்றார் பிரதமர் மோடி. போலி நிறுவனம் என்றார் உள்துறை அமைச்சர். ஊழல், லஞ்சம் தரப்பட்டதாக நாடாளுமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பேசினார். ஆனால் இப்போது தடை நீக்கப்பட்டுள்ளது. மோடி அரசுக்கும், பின்மெக்கானியா நிறுவனத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தம் என்ன? இதை நாட்டுக்கு அவர்கள் விளக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

More