×

ஆவடி தொகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு: தேங்கிய நீரை அகற்ற உத்தரவு

ஆவடி: ஆவடி தொகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்து தேங்கிய மழைநீரை அகற்ற உத்தரவிட்டார். ஆவடி தொகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், முக்கிய சாலைகள் தெருக்களில் வெள்ளநீர் ஆறாக ஓடியது. மேலும், வீடுகளை சூழ்ந்து மழை நீர் தேங்கி நின்றது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆவடி, திருமுல்லைவாயல், கோயில்பதாகை, பட்டாபிராம் ஆகிய தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும், சில வீடுகளில் மழை நீர் சூழ்ந்தது.

இதோடு மட்டுமில்லாமல், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. ஆவடி மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சத்தியசீலன் ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு முக்கிய சாலைகள், தெருக்களில் உள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் டீசல் மோட்டார் மூலம் மழைநீர் தேங்கி பகுதிகளில் தண்ணீர் அப்புறப்படுத்தும் பணியில் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். மேலும், கால்வாய் உள்ள அடைப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றி வருகின்றனர்.

இதனையடுத்து, ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெயக்குமார் எம்.பி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, விளிஞ்சியம்பாக்கம், பருத்திப்பட்டு, திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலை, அரபாத் ஏரி, மணிகண்டபுரம், கோயில்பதாகை, கண்ணடபாளையம், பட்டாபிராம் நேரு நகர், சோழன் நகர் ஆகிய இடங்களை பார்வையிட்டு மழைநீர் அகற்றும் பணிகளை முடுக்கிவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினர். இதில் திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் வக்கீல் சேகர் பதாகை வீ.சிங்காரம், ஆவடி பகுதி செயலாளர்கள் ராஜேந்திரன், பேபி சேகர், நாராயணபிரசாத், பொன்.விஜயன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில விவசாய பிரிவு தலைவர் பவன்குமார்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Minister ,Nassar , Minister Nasser personally inspects rain and flood damage in Avadi constituency: Order to remove stagnant water
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...