தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு ஆரணியாற்று தரைப்பாலம் 2 இடங்களில் உடைந்தது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்து, 2 இடங்களில் தரைப்பாலம் உடைந்தது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் ஆரணியாற்றில் கலந்தது. மேலும், பிச்சாட்டூர் ஏரியில் இருந்தும் நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே உள்ள ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே ரூ.27 கோடியில் புதிய பாலம் கட்டப்படுவதால், போக்குவரத்திற்காக தற்காலிகமாக மாற்று தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் சேதமடைந்து விடும் என்ற அச்சத்தால் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் போக்குவரத்து நேற்று முன்தினம் காலை முதல்  நிறுத்தப்பட்டது.  இந்நிலையில், தற்காலிகமாக கார், பைக் மட்டும் புதிய பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால், கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. ஆரணியாற்றில் தண்ணீர் வரத்து நேற்று முன்தினம் நள்ளிரவு அதிகமானதால் தற்காலிக தரைப்பாலம் 2 இடங்களில் மூழ்கி உடைந்தது. நேற்று காலை பீச்சாட்டூர் ஏரியில் இருந்து தற்போது 600 கன அடியாக குறைத்து அனுப்பப்படுகிறது. இதற்கிடையில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் உடைந்த தரைப்பாலத்தை நேற்று ஆய்வு செய்தார்.

Related Stories:

More