தொடர் கனமழையால் நீர்மட்டம் உயர்வு பூண்டி நீர்த்தேக்கத்தை அதிகாரி நேரில் ஆய்வு

திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதை தொடர்ந்து நீர்வள ஆதாரத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகரித்தது. இதற்கிடையே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் நீர்வள ஆதாரத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளின் மோட்டார்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து நீரியல் ஆய்வு மையத்திற்கு செல்லும் மதகில் கசிவு எதுவும் உள்ளதா எனவும், நீர்மட்ட அளவு கண்காணிக்கும் கேமரா சரியான முறையில் செயல்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். பிறகு மேல் நடவடிக்கை குறித்த விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் தொடர்ந்து ஏரியின் நீர் மட்டத்தை கண்காணிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து  ஏழுகிணறு கால்வாய் மூலம் பழவேற்காடு ஏரியில் சேரும் ஏழுகிணறு பகுதியில் தேசிய பேரிடர் கடல்சார் வாரிய சேர்மன் பாஸ்கர் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர்  மீனா பிரியதர்ஷினி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி  அலுவலர் வாசுதேவன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

* கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நீர்வள ஆதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறுகையில், `வெள்ள சேதத்தால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு மற்றும் யூகலிப்டக்ஸ் கொம்புகள் அனைத்தும் ஒவ்வொரு பகுதியிலும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் வரத்து காரணமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கான மழைநீர் வரத்து, ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணை மற்றும் கண்டலேறு நீர் வரத்து போன்றவைகளால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்று இருகரையோரங்களில் உள்ள கிராம பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: