நாக சதுர்த்தியையொட்டி பாம்பு புற்றில் பால் ஊற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் நாக சதுர்த்தியையொட்டி பெண்கள் பாம்பு புற்றில் பால் ஊற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். ஊத்துக்கோட்டையில் நாக சதுர்த்தி விழாவையொட்டி பஸ் நிலையம் அருகேயுள்ள ஸ்ரீநாகவல்லி அம்மன் கோயிலில் விநாயகர், முருகர், நாகவல்லியம்மன், நவகிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு கோயில் குருக்கல் சுரேந்தர், பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்தார். பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், ரெட்டி தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, சத்தியவேடு சாலை என பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கோயில் வளாகத்தில் உள்ள புற்றில் பால் ஊற்றி, புடவைகளை சார்த்தியும், கம்பு, எள்ளு, மாவிளக்கு போட்டு, தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல், நாகலாபுரம் சாலையில் போக்குவரத்து பணிமனை அருகே உள்ள ஸ்ரீநாகவல்லி அம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜைகளை கோயில் குருக்கல் குமார் செய்தார். இங்கும் நூற்றுக்கணக்கான பெண்கள் புற்றில் பால் ஊற்றி, புடவைகளை சார்த்தி வழிபட்டனர்.

Related Stories:

More