×

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் 10 வாரங்களில் இறுதி அறிக்கை: லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை  அல்லது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்படிருந்தது. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி பொன்னி தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கை முடிக்க அனுமதி கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்தார். அப்போது, எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.இளங்கோவன், முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு அட்வகேட் ஜெனரல், ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை வழக்கு ஆவணமாக பயன்படுத்தினால், அதை முன்னாள் அமைச்சர் கீழமை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் அந்த அறிக்கையை வழங்க முடியாது என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை அல்லது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன என்று உத்தரவிட்டனர்.

Tags : Former ,Minister ,S.S. ,Chennai ,Coi Municipality Tender ,Vedamani , Chennai, Coimbatore Corporation Tender Fraud Complaint Against Former Minister SB Velumani Final Report in 10 Weeks: High Court orders Anti-Corruption Police
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...