×

சட்டீஸ்கர் முகாமில் பரபரப்பு சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டதில் 4 வீரர்கள் பலி: கேலி செய்த விவகாரம் காரணமா?

சுக்மா: சட்டீஸ்கர் துணை ராணுவப்படை முகாமில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தனது ஏகே.47 துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம், நக்சல்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள லிங்கப்பள்ளி கிராமத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) 50வது பட்டாலியன் படைப் பிரிவினரின் முகாம் அமைந்துள்ளது. வழக்கம் போல் நேற்று அதிகாலை முகாமில் சுமார் 40-45 வீரர்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 3.15 மணி அளவில் ரித்தீஷ் ரஞ்சன் என்ற வீரர், அவர் வைத்திருந்த ஏகே.47 துப்பாக்கியால் வீரர்களை சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சத்தம் கேட்டு வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ரித்தீஷ் ரஞ்சனை மடக்கிப் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில், 7 வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை தெலங்கானா மாநிலத்தை ஒட்டி உள்ள பத்ராசலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் வரும் வழியிலேயே 4 வீரர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மற்ற 3 வீரர்கள் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மற்றும் மேற்கு வங்கம், பீகார் மாநில அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பலியான வீரர்களுக்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார். ரஞ்சனும், பலியான வீரர்களும் கடந்த 2-3 நாட்களாக ஒருவரை ஒருவர் கேலி, கிண்டல் செய்து பேசியதாக கூறப்படுகிறது. இதில் மற்றவர்களின் கேலியை தாங்கிக் கொள்ள முடியாமல், ஆத்திரமடைந்ததால் ரஞ்சன், துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் சட்டீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : CRPF ,Chhattisgarh , Four CRPF soldiers shot dead in Chhattisgarh camp
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை