×

இந்தியாவில் கொரோனா 3வது அலை வருவதற்கு வாய்ப்புள்ளது: பெரிய பாதிப்பு இருக்காது.! ஐஎம்ஏ தேசிய தலைவர் தகவல்

ஈரோடு: நமது நாட்டில் கொரோனா 3வது அலை வருவதற்கு வாய்ப்புள்ளது என ஈரோட்டில் ஐஎம்ஏ தேசிய தலைவர் ஜெயலால் தெரிவித்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் ஜெயலால் ஈரோட்டில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்கள் முன்னின்று பணியாற்றினார்கள். அந்த பணியில் 2 ஆயிரம் டாக்டர்கள் இறந்திருக்கிறார்கள். மத்திய அரசு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தியபோது இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்கள் முதலில் செலுத்தி கொண்டு, அதனால் என்ன பாதுகாப்பு ஏற்படுகிறது என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு அளித்தனர்.

இதனால் தற்போது 100 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். நாட்டில் 3வது அலை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்த அலையினால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகமிக குறைவாகத்தான் இருக்கும். அதற்கு காரணம் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். வைரசால் ஏற்படக்கூடிய மரபணு மாற்றங்கள் கடந்த சில நாட்களாக ஏற்படவில்லை. ஏற்கனவே இருந்த டெல்டா பிளஸ் வைரஸ் தடுப்பு மருந்தை பெரும்பாலானோர் எடுத்து கொண்டுள்ளனர். எனவே 3வது அலை வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. தமிழக அரசு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி அதிகளவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நடமாடும் வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பணியின்போது இறந்த டாக்டர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. டாக்டர்கள் உற்சாகமாக பணியாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. கொரோனா நோய்க்கான மாத்திரை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அதை முழுமையாக ஏற்று கொள்ளவில்லை. இந்திய அரசு ஆணையமும், சுகாதாரத்துறையும் அனுமதித்தால் மட்டுமே பயன்படுத்துவோம்.  இவ்வாறு ஜெயலால் கூறினார்.

Tags : Corona ,India ,IMA ,president , Corona 3rd wave is likely to come in India: no major impact! IMA National Leader Information
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...