×

பழநி, திருப்பரங்குன்றம் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

பழநி: பழநி கந்தசஷ்டி விழாவில் நாளை சூரசம்ஹாரமும், நாளை மறுதினம் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி விழா, கடந்த 4ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (நவ.9) நடைபெற உள்ளது. இதனால் காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பிற்பகல் 2.45 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதன்பிறகு கோயில் நடை அடைக்கப்படும். பின்னர் மலைக்கோயிலில் இருந்து சின்னக்குமாரர் கிரிவீதி வந்தடைவார்.

பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி மங்கம்மாள் மண்டபம் வந்தடைவார். மாலை 6 மணிக்கு மேல் கிரி வீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இரவு 9 மணிக்கு கோயில் சார்பில் வெற்றி விழா நடைபெறும். தொடர்ந்து சம்ரோட்சணம் செய்யப்பட்டு, ராக்கால பூஜை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை மறுதினம் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மலைக்கோயிலில் நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்று பகல் 12.30 மணி வரை மலைக்கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை. சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் யூடியூப் மற்றும் வலைத்தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கோயில் உற்சவ நிகழ்ச்சிகளில் தொடர்புடைய அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இன்று முருகன் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், , நாளை (நவ.9) சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நாளை காலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 4.30 முதல் 5.30 மணி வரை கோயிலுக்கு உள்ளே உள்ள திருவாச்சி மண்டபத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாலை 4 முதல் 7 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இரவு 7 மணிக்கு பின் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Shurasamharam ,Temple of Palani ,Tirunangurundam , Surasamaharam tomorrow at Palani, Thiruparankundram temple: Devotees are not allowed
× RELATED சாமி தரிசனம் செய்ய அனுமதி: பழனி மலைக் கோயிலில் காத்திருக்கும் பக்தர்கள்..!