×

சென்னை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு.!

சென்னை: மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு.க்ஷி செந்தில்பாலாஜி அவர்கள் சென்னை மின்விநியோக கட்டுப்பாட்டு மையத்தை இன்று ஆய்வு செய்தார். மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் உள்ள சென்னை மின்விநியோக கட்டுப்பாட்டு மையத்தை இன்று (08.11.2021) ஆய்வு செய்தார்.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., இயக்குநர்/பகிர்மானம் திரு.மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பருவமழை காலங்களில் ஏற்படுகின்ற பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு அனைத்து துறைகளுக்கும் பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருக்கிறார்கள். மின்சாரத்துறையினைப் பொறுத்தவரை சீரான மின்விநியோகம் இருக்க வேண்டும் என்று உத்தரவுகளை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் எந்தவிதமான பாதிப்புகளும் வந்து விடக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை வழங்கியிருக்கிறார்கள்.

சென்னையில் இருக்கக்கூடிய 223 துணை மின் நிலையங்களில் ஒரே ஒரு துணை மின் நிலையத்தில் மட்டும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இருக்கக்கூடிய 1,757 பீடர்களில், 18 பீடர்களுக்கு மட்டுமே மின்விநியோகம் பொது மக்களின் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 34,047 மின்மாற்றிகளில் 221 மின்மாற்றிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 44,20,000 மின் பயனீட்டாளர்களில் 12,297 மின் நுகர்வோர்களுக்கு மட்டுமே மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மழைநீர் முழுவதும் வடிந்த பிறகு அந்த பகுதிகளுக்கும் சீரான மின்விநியோகம் வழங்குவதற்கு மின்வாரியம் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருக்கின்றது.

சென்னையில் உள்ள மொத்த மின்நுகர்வோர்களில் 0.2% மட்டுமே தற்போது மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மழைநீரால் எந்தவிதமான பாதிப்புகளும் பொது மக்களுக்கோ அல்லது மின்விநியோகத்தில் வந்து விடக்கூடாது என்பதற்கான முன்னேற்பாடாக மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக பி&சி மில்,  புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம், வள்ளுவர்க்கோட்டம், உள்ளிட்ட பகுதிகளில் தான் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.    

கேள்வி : இந்த தொடர் மழையால்  மின்கம்பங்கள், மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதா ?

இதுவரைக்கும் அந்த மாதிரி பாதிப்புகள் வரவில்லை, ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலகட்ட அளவில் அனைத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் ஆய்வு கூட்டங்களை நடத்தி பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருக்கிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய    நடவடிக்கையால் எடுக்கப்பட்ட முன்நடவடிக்கையால் பல்வேறு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டியிருந்தன, அதனால் தான் எந்தவிதமான பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை.

கேள்வி : மின்சாரம் தாக்கி இதுவரை உயிர் இழப்பு வந்துள்ளதா?    

இதுவரைக்கும் அந்த மாதிரி சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்ததாக தகவல் வரப்பெறவில்லை, அது போன்ற சூழ்நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் முன்னேற்பாடாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

கேள்வி : சென்னையை தவிர்த்து செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை அதிகமாக உள்ளன, அந்த மாவட்டங்களில் என்ன முன்னெச்சரிக்கைகள் செய்திருக்கிறீர்கள் ?

அந்த மாவட்டங்களில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படவில்லை, பாதிப்புகள் வந்து மழை பெய்யக்கூடிய அளவிற்கு இருந்தாலும் கூட முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்ட காரணத்தினால் மின்விநியோகம் சீராக இருக்கின்றது. மின்தடை ஏற்பட்டால் வரக்கூடிய புகார்களை மின்வாரியம் உடனடியாக சரி செய்கிறது. தமிழ்நாடு முழுவதுமே அனைத்து மண்டலங்களிலும், அனைத்து வட்டங்களிலும் அந்தந்த துறைகளை சார்ந்த மின் உயர் அதிகாரிகள் தலைமையிலே குழுக்கள் தயாராக உள்ளார்கள். ஒரு மாவட்டத்தில் பாதிப்பு என்று சொன்னால் உடனடியாக மற்ற பகுதிகளிலிருந்தும் அதற்கு தேவையான பணியாளர்கள் நேரில் சென்று சரிசெய்யக்கூடிய பணிகளை விரைவாக செய்து முடித்து மின் விநியோகத்தை சீர்ப்படுத்தி வருகிறார்கள்.

கேள்வி : 11.11.2021 மற்றும் 12.11.2021 தேதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் என வானிலை மையம் சொல்லி இருக்கிறார்கள், அந்த காற்றழுத்தத்தினால் சென்னையில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் பழுதடைந்தால், அதை சரி செய்ய எத்தனை மின்கம்பங்கள், மின்மாற்றிகள் தயார் நிலையில் உள்ளன ?

ஒரு இலட்சம் மின்கம்பங்கள் மற்றும் அனைத்து மின் உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ஆய்வு கூட்டங்கள் நடைபெற்று, அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதேப்போல தமிழகம் முழுவதும் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளார்கள்.  ஏதேனும் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அவை சரிசெய்யப்படும்.

கேள்வி : நேற்றைய தினம் மட்டும் மின்னகத்தில் எத்தனை புகார்கள் பதிவு செய்திருக்கிறார்கள் ?

சென்னையில் மட்டும் 1,508 புகார்கள் வந்துள்ளன. அதில் 607 புகார்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. மீதியிருக்கக்கூடிய 901 புகார்களுக்கு இன்று பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இன்று மதியம் அல்லது மாலைக்குள் அந்த பணிகள் சரிசெய்யப்படும். மற்ற மாவட்டங்களில் பாதிப்புகள் குறைவாக இருக்கின்றது.  மின்விநியோகத்திலும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை, வருகின்ற ஒன்று, இரண்டு புகார்களும் சரி செய்யப்பட்டு வருகின்றது.  ஒரு மணி நேரத்திற்குள் விரைவாக சரி செய்கிறார்கள்.  இதற்கு காரணம் ஏற்கனவே முதலமைச்சர் உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் மாநிலம் முழுவதுமே எந்த பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த பகுதிக்கு சென்று பணிகளை சரிசெய்ய பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.

Tags : Minister Senthilpology ,Chennai Power Generation and Distribution Corporation , Chennai Power Generation and Distribution Corporation Head Office Minister Senthilpalaji study.!
× RELATED போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி...