×

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கேற்ப தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.! ஆர்.பி. உதயகுமாருக்கு அமைச்சர் பதில்

சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கேற்ப தகுந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆர்.பி. உதயகுமார் அவர்களின் கேள்விக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களின் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது; முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் உறக்கத்தில் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே பேட்டி அளித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 4 முறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள். ஆட்சி பொறுப்பேற்ற இந்த 5 மாத காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் மிகப்பெரிய அளவில் தூர்வாரியதன் விளைவாக சாலைகளில் மழை நீர் தேங்கும் அவலம் குறைந்துள்ளது. தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை, மாநகராட்சி அதிகாரிகள், அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகளின் உதவியுடன் வெளியேற்றி வருகின்றனர்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், பருவமழை குறித்து நடத்திய ஆய்வுக் கூட்டம் செயல் வடிவம் பெற வில்லை என்று திரு. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். ஆய்வுக் கூட்டம் நடந்து முடிந்த உடனேயே எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். தேர்தலுக்கு முன்பாக தேர்தல் அறிக்கையில்  அறிவித்த திட்டங்களையும் இன்றைக்கு செயலாக்கம் செய்து கொண்டு வரும் முதலமைச்சர் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள். மறைந்த ஜெயலலிதா அம்மையார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளை போல் செயல் வடிவம் பெறாமல் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு பேச வேண்டாம்.

சென்னை எழிலகத்திலுள்ள பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்கள் நேற்று வருகை புரிந்து ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கியதைக் கூடத் தெரியாமல் பேட்டி அளித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும், 15 மி.கி.ஷி., அதிகாரிகளை உடனடியாக நியமித்து பணிகளை முடுக்கி விட்டு இருக்கின்றார்கள் நமது முதலமைச்சர் அவர்கள். 2015-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு ஏற்படுத்திய பாதிப்பை போல் இல்லாமல், இந்த ஏரியை கண்காணித்து சரியான அளவில் மழை நீரை வெளியேற்றுவதற்கு ஒரு உயர்நிலை கண்காணிப்புக் குழுவை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்.

உங்கள் ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சென்னை மக்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்கள் முழுவதும் இன்னும் மறக்கவில்லை. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு உணவு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதகதியில் மேற்கொண்டு வருகிறார்கள். டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயை பற்றி திரு. உதயகுமார் கேள்வியாக கேட்டுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற 5 மாத காலத்திற்குள்ளேயே கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திய உன்னதமான முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர்.

அறிவியல் யுகத்தில் வடகிழக்குப் பருவமழையை பற்றி அரசு கனிக்கத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார் திரு. உதயகுமார். வடகிழக்குப் பருவமழை துவங்கிய 26.10.2021 அன்று முதல் இன்று வரை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கேற்ப தகுந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அறிவியலில் அதிக நாட்டம் கொண்ட அவர்களது ஆட்சியில் மழை மற்றும் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் பட்ட சிரமங்கள் குறிப்பாக 10 நாட்கள் மின்சார வசதியின்றி மக்கள் பட்ட அல்லல்களை நாடு இன்னும் மறக்கவில்லை.

வீடுகளில் குடியிருந்தவர்கள் மேல் மாடியில் உட்கார்ந்து கொண்டு உணவிற்காக ஏங்கியதை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டுதான், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவை ஆட்சியில் மக்கள் அமர்த்தினார்கள். 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றியையும், அ.தி.மு.க.-விற்கு படுதோல்வியையும் அளித்துள்ளார்கள். எனவே, இனியாவது திரு.உதயகுமார் களச்சூழ்நிலையை அறிந்து கொண்டு பேட்டி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.


Tags : Meteorological Center ,R. ,RB ,Udaiakumar , We are taking appropriate action as per the announcement of the Meteorological Center.! R.P. Minister's reply to Udayakumar
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...