×

டெண்டர் முறைகேடு புகார்!: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அப்போதைய உள்ளாட்சி துறையில் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி கைகாட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேபோல் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜெயராம் வெங்கடேஷ் தொடர்ந்த வழக்கில், 2018 செப்டம்பர் 12ம் தேதியன்று சி.பி.ஐ. மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்ததில், 2014 ஜூன் முதல் 2017 நவம்பர் வரை கோவை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட பல பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் வேலுமணி தாக்கல் செய்த பதில் மனுவில், அமைச்சர் என்ற முறையில் துறை ரீதியிலான முடிவுகளை மட்டும் எடுத்ததாகவும், மாநகராட்சி டெண்டர் நடைமுறையில் தலையிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

நிலுவையில் இருந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டதால் மேற்கொண்டு விசாரணையை நிலுவையில் வைக்காமல் திமுக, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில், கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை நகல் தரவேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அச்சமயம் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் மீதும் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தார். ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை கேட்கிறார்கள். கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். வேலுமணி சார்பில், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை பெற தங்களுக்கு உரிமை உள்ளது என்று வாதிடப்பட்டது.

அப்போது அறப்போர் இயக்கம் சார்பாக ஆஜரான சுரேஷ், ஏற்கனவே கடந்த ஆட்சியில் வழக்கை முடித்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்ததாகவும், ஏற்கனவே 2 மத்திய தணிக்கைத்துறை அறிக்கைகள் வேலுமணிக்கு எதிராக உள்ளதாகவும், எனவே கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை நகலை தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட  நீதிபதிகள், முறைகேடு புகார் தொடர்பாக புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்சஒழிப்புத்துறை போலீசாருக்கு  உத்தரவிட்டனர். முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வழக்கில் சேர்க்கப்பட்டால் கீழமை நீதிமன்றத்தை அணுகி சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Tags : Former ,Minister ,S.C. RB ,ICORD ,Department of Dismansion ,Valencia , S.P. Velumani, Criminal, Corruption Eradication, iCourt
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...