×

அசுர வேகத்தில் வளர்ச்சி!: சொமேட்டோவை தொடர்ந்து பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது பே.டி.எம்..!!

டெல்லி: மிகப்பெரிய டிஜிட்டல் பரிவர்த்தனை தளமாக பே.டி.எம். பங்குசந்தையில் இன்று தடம் பதிக்கிறது. இந்திய மூலதன சந்தை வரலாற்றில் மிகப்பெரிய பங்கு வெளியீடாக பே.டி.எம். உருவெடுக்கவுள்ளது. சின்னஞ்சிறு காய்கறி கடைகள் முதல் பிரம்மாண்ட மால்களில் வீற்றிருக்கும் கே.எஃப்.சி. வரை பே.டி.எம். இல்லாத கடையோ, வணிக நிறுவனமோ இல்லை என்றே சொல்லலாம். பர்சில் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு பதில் ஸ்மார்ட் போன் மூலம் பே.டி.எம். கியூ.ஆர் கோர்டை ஸ்கேன் செய்து பணத்தை கட்டுவது எளிதாகிவிட்டது பலருக்கும். 2010ம் ஆண்டில் வெறும் 14 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட பே.டி.எம். நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 1,10,000 கோடிக்கும் மேல் உள்ளது.

மொபைல்போன், டி.டி.எச். சேவைகளை ரீசார்ஜ் செய்யும் தளமாக தொடங்கப்பட்ட பே.டி.எம். நிறுவனம், காலப்போக்கில் ஸ்மார்ட் போன் யுகத்தின் வளர்ச்சிக்கேற்ப தம்மை பல்வேறு தளங்களிலும் விரிவாக்கிக்கொண்டது. 2014ம் ஆண்டில் வாலட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஜெட் வேகத்தில் அது வளர தொடங்கியது. ஒரே ஆண்டில் பே.டி.எம். பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 18 லட்சத்தில் இருந்து 10 கோடியே 40 லட்சமாக அதிகரித்தது. 2015ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பே.டி.எம். பேமண்ட் வங்கி, 2016ம் ஆண்டு இதேநாளில் பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட பிறகு அசுர வேகத்தில் வளர்ந்தது.

இன்று ஆன்லைன் பரிவர்த்தனை தளம், பேமண்ட் வங்கி, நிதி சேவைகள் என பல்வேறு பிரிவுகளில் தவிர்க்க முடியாத நிறுவனமாக  பே.டி.எம். உருவெடுத்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி பே.டி.எம்.ற்கு 2 கோடியே 20 லட்சம் வியாபாரிகள் உள்பட சுமார் 36 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 10 ஆண்டுகாலம் அசுர வளர்ச்சி கண்ட பே.டி.எம். நிறுவனத்திற்கு கடந்த 2 ஆண்டுகளும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. அடுத்தடுத்து 2 நிதியாண்டுகளாக இழப்பை சந்தித்த பே.டி.எம். நிறுவனமா, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் பொருட்டு நிதி திரட்ட பங்கு வெளியீட்டில் இறங்குகிறது.

மும்பை பங்குசந்தையில் இன்று முதல் புதன்கிழமை வரை 3 நாட்கள் பே.டி.எம். நிறுவனத்தின் தாய் நிறுவனமான 197 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வெளியிடப்படும். 6 பே.டி.எம். பங்குகள் கொண்ட ஒரு லாட்டின் விலை ரூ.12,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 18ம் தேதி பங்கு சந்தையில் இந்நிறுவனம் பட்டியலிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் 18,300 கோடி ரூபாய் திரட்ட பே.டி.எம். நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் கோல் இந்தியாவை விஞ்சி இந்திய பங்குசந்தையில் அதிக நிதி திரட்டிய நிறுவனம் என்ற பெருமையை பே.டி.எம். பெறும் என்று சந்தை வல்லுநர்கள்  கூறுகின்றனர்.

Tags : BTM ,Somato , Somato, public offering, P.D.M.
× RELATED 2023ல் சொமேட்டோவில் அதிகம் ஆர்டர்...