திருச்சுழி, காரியாபட்டியில் பாலங்களை மூழ்கடித்து செல்லும் மழைநீர்-ஆபத்தை உணராமல் ஆற்றைக் கடக்கும் மக்கள்

திருச்சுழி : திருச்சுழி குண்டாற்றில் செல்லும் தண்ணீரின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடந்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சுழி பகுதியில் பல வருடங்களாக சரிவர மழை பெய்யாமல் போனதால் குண்டாற்றில் நீர்வரத்தின்றி காணப்பட்டது. மேலும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு கருவேலம் முட்கள் அடர்ந்து காணப்பட்டன. மேலும் திருச்சுழி கண்மாய்க்கு தோணுகால் அருகே தடுப்பு அமைத்து குண்டாற்று நீரை கொண்டு சென்றனர். தற்போது அப்பகுதி தடுப்பணை கட்டப்படுவதால் குண்டாற்றில் வரும் நீர் நேரடியாக திருச்சுழி பகுதிக்கு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருமங்கலம் பகுதியில் அதிகளவில் மழை பெய்ததால் திடீரென்று குண்டாற்றில் அதிகளவில் மழைநீர் செல்கிறது. இதனை தொடர்ந்து உடையனாம்பட்டி, நொச்சிகுளம், உடைகுளம், தாமரைக்குளம் உள்பட பல கிராமங்களிலிருந்து திருச்சுழிக்கு வருவதற்கு குண்டாற்று தரைபாலத்தின் வழியாக வருகின்றனர். மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது கேத்தநாயக்கன்பட்டி வழியாக சுமார் 8 கி.மீ சுற்றி வரவேண்டியுள்ளதால் ஆபத்தை உணராமல் குண்டாற்றில் மழைநீர் சென்றாலும் அதன்வழியாக நடைபயணமாகவும், இருசக்கர வாகனத்திலும் கடந்து செல்கின்றனர். இதனால் ஆபத்து ஏற்படும் நிலையுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரியாபட்டி

வடகிழக்கு பருவமழை காரணமாக காரியாபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காரியாபட்டி  அருகே பிசிண்டி, வக்காணங்குண்டு,  பி.புதுப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் குண்டாற்று பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின்னர் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பிசிண்டி தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆனால். வெள்ள ஆபத்தை உணராத பொதுமக்கள் தரைப்பாலத்தின் மேல் நடந்தும், டூவீலர்களிலும் கடந்து செல்கின்றனர். மேலும் பல ஆண்டுகளுக்குப்பின் குண்டாற்றில் வெள்ளம் செல்வதால் அதை சுற்றுவட்டார கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்ப்பதுடன் குடும்பத்துடன் குளிக்கின்றனர். இதனால் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வெள்ளம் அதிகமாகி உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது . இந்நிலையில், காரியாபட்டி தாசில்தார் தனகுமார் மற்றும் போலீசார் பொதுமக்களை பாலத்தை கடக்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை செல்லும் சாலையில் இடையில் லிங்கம் கோயில் ஓடை உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த ஓடையில் தரைப்பாலம் இருந்தது. அதை உடைத்து பெரிய பாலம் கட்டுவதற்கு தூண்கள் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இந்த ஓடை வழியாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் பணிகள் தாமதமடைந்தது.

மேலும் பால வேலையை துரிதப்படுத்தாமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. தற்காலிக சாலையில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மண் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து வந்தது. திமுக அரசு பதவியேற்றவுடன் இந்த ஓடையில் பாலம் கட்டும் பணி துரிதமாக வேலை நடைபெற்று வந்தது. பாலப்பணி முழுமையடைய உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இந்த ஓடையில் அளவுக்கதிகமான வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தற்காலிக சாலை மண் அரிப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக இந்த சாலை வழியாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்தப் பாலம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு முழுமை அடையும் நிலையில் உள்ளது.

Related Stories: