ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதியில் செங்காந்தள் மலர் எனப்படும் கண்வலி கிழங்கு நடும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது.ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பொதுமக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். சில சமயங்களில் விவசாயப் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காததால், பெரும் இழப்பிற்கு ஆளாகின்றனர். ஆகவே இப்பகுதியில் உள்ள பல விவசாயிகள் சங்ககால இலக்கியத்தில் புலவர்களால் பாடப்பட்ட மருத்துவக்குணம் கொண்ட மூலிகைப்பயிரான செங்காந்தள் மலர் எனும் கண்வலிச்செடியை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
செங்காந்தள் பயிர் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே சாகுபடி செய்யப்படும். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி உள்ளதால் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, கே.டி.பாளையம், பெரியகோட்டை, கொத்தயம் ஆகிய பகுதிகளில் அதிகமாக செங்காந்தள் மலர் பயிரிடப்பட்டுள்ளனர்.
மேலும் இப்பயிர் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி கரூர், சேலம், நாமக்கல், தாராபுரம், திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகளவில் பயிர்செய்யப்படுகிறது. பயிர் செய்யப்படும் கிழங்குகள் நன்கு முளைத்து, கொடியாக வளர்ந்து, பந்தலில் படர்ந்து வளர்கிறது. பூக்கள் பூத்தவுடன் பூக்களை ஒட்டுக்கட்டுகின்றனர். அதன் பின்பு நன்கு வளர்ச்சியடைந்து, பயிர் செய்த 6 மாதத்தில் விதைகள் நன்கு வளர்ந்து உற்பத்தியாகிறது.
இவ்வாறு உற்பத்தியாகும் கண்வலி கிழங்குகள் வெளிநாடுகளான இத்தாலி, ஜெர்மன், அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு இந்த விதைகள் மூலம் கோல்சிசின் சூப்பர்பின் எனப்படும் வேதிப் பொருட்கள் பிரித்தெடுத்து, அல்சர், தொழுநோய், பால்வினை நோயான எச்.ஐ.வி, ஆஸ்துமா, விஷக்கடி, வீக்கம் போன்ற நோய்களை தடுப்பதற்காக தயாரிக்கப்படும் முக்கிய மருந்துப் பொருளாக தயார் செய்யப்படுகிறது.
இந்த கண்வலி விதைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளது. பயிர் செய்யப்படும் கண்வலி கிழங்குகள் ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால் இதனை விற்கும்பொழுது விவசாயிகள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுகின்றனர். எனவே கண்வலி விதைகளை கொள்முதல் செய்ய ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
