தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் சென்னை திரும்பினர்-ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது

தஞ்சை : தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு வந்த மக்கள் நேற்று மீண்டும் சென்னைக்கு திரும்பினர். இதனால் தஞ்சை ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 4ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா முழு அடைப்பு நேரத்தில் தீபாவளியை கொண்டாட முடியாமல் மக்கள் தவித்தனர். வருமானம் இழப்பு, வேலை இல்லாத நிலை என்று தவித்து வந்த மக்களுக்கு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் இயல்பான நிலைக்கு திரும்பி வந்தனர்.

அதனால் இந்தாண்டு தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முக்கியமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்பதால் கடந்த 5ம் தேதியும் அரசு விடுமுறை தினமாக அறிவித்தது. தொடர்ந்து நாளை முதல் இயல்பான பணிக்கு திரும்ப வேண்டும் என்பதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் நேற்று காலை முதல் புறப்பட தொடங்கி உள்ளனர். அந்த வகையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்ல சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை அதிகளவு இருந்தது. இதனால் தஞ்சை ரயில் நிலையம் மக்கள் கூட்டத்தால் திணறியது.

Related Stories: