தஞ்சை மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டில் தேங்கி கிடக்கும் கழிவு

*நோய் தொற்று பரவும் அபாயம்*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தஞ்சை : தஞ்சை மாநகராட்சி தற்காலிக காய்கறி மார்க்கெட் காய்கறி கழிவு மழைநீருடன் கிடப்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தஞ்சை அய்யன் கடைத்தெருவில் இருந்த காய்கறி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு புதிய மார்க்கெட் கட்டும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து அங்கு காய்கறி மார்க்கெட் வைத்திருந்த வியாபாரிகள் தற்காலிகமாக கடை வைக்க தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.

தற்காலியமாக செட் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட அளவுகளில் தடுப்புகள் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது. ஆனால் கடைகள் முழுவதும் சாலையில் இருந்து பள்ளத்தில் அமைக்கப்பட்டதால் தற்போது பெய்து வரும் மழையால் மார்க்கெட் பகுதி மழை நீர் சூழ்ந்து தத்தளிக்கிறது. அத்துடன் கழிவு நீரும் சேர்ந்து கொண்டதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அழுகிப்போன காய்கறிகள் அங்கேயே கொட்டப்படுவதால் மழையில் நனைந்து மேலும் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து சென்று வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடை வாசலில் கழிவுநீர் நிற்பதால் வியாபாரிகளும் நிம்மதியாக காய்கறி வியாபாரம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மார்க்கெட் முழுவதும் சாலையில் இருந்து சுமார் 3 அடி பள்ளத்தில் உள்ளதால் மார்க்கெட்டை சுற்றி பெய்யும் மழைநீர் மார்க்கெட்டில் உள்ளே எளிதில் நுழைந்து தேங்கி நிற்கிறது. கடும் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் மார்க்கெட்டிற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாநகராட்சி சுகாதாரத் துறையினர் மற்றும் ஆணையர் இதில் நேரடி கவனம் செலுத்தி மார்க்கடடை சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை வாசிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: