தீபாவளி தொடர் விடுமுறை முடிவுக்கு வந்தது ஊட்டியில் இருந்து ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள்-சமவெளி பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்கம்

ஊட்டி :  தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையின் கடைசி நாளான நேற்றும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்பட்டது.  தீபாவளி  பண்டிகை கடந்த 4ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தமிழகத்தில் 7ம்  தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா  நகரமான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதற்கேற்ப நல்ல  மழையும் பெய்ததால் குளு குளு காலநிலையை அனுபவித்தபடியே சுற்றுலா தலங்களை  பார்த்து ரசித்தனர்.

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  நிறுவனங்கள் போன்றவற்றில் தீபாவளி விடுமுறை விடப்பட்டிருந்ததால் விடுமுறையை  கொண்டாட சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டனர். ஊட்டியில் உள்ள  தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில்  கூட்டம் காணப்பட்டது.

 இதுதவிர நகருக்கு வெளியில் அமைந்துள்ள பைக்காரா படகு  இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக் உள்ளிட்ட பகுதிகளுக்கும்  சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு  தீபாவளி தினத்தன்று 9800 பேரும், 5ந் தேதி 10 ஆயிரத்து 620 பேரும்,  6ந் தேதி 13 ஆயிரம் பேரும், ஞாயிற்றுக்கிழமையன்று 10 ஆயிரம்  சுற்றுலா  பயணிகள் என மொத்தம் 43 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

தீபாவளி பண்டிகை  விடுமுறை நிறைவடைந்த நிலையில், நேற்று மாலை முதல் பொதுமக்கள், சுற்றுலா  பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் 3 மணிக்கு பின்  சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்தது. வெளியூர் செல்லும் பொதுமக்கள்  வசதிக்காக போக்குவரத்து கழகத்தின் சார்பில் சமவெளி பகுதிகளுக்கு கூடுதல்  பஸ்களும் இயக்கப்பட்டன.

Related Stories: