×

பவானி பகுதியில் விடிய விடிய மழை வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்-தண்ணீரில் தத்தளித்த கால்நடைகள்

பவானி : பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள
வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய நீடித்தது. பவானி சுற்று வட்டார கிராமங்களான தொட்டிபாளையம், ஊராட்சிக்கோட்டை, செலம்ப கவுண்டன்பாளையம், சீதபாளையம், தாளகுளம், சங்கரகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளை சூழ்ந்தது.

தொட்டிபாளையம் ஊராட்சி, பழைய காலனி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வயல்வெளிகளிலிருந்து வடிந்த  தண்ணீர் பவானி அந்தியூர் ரோட்டில் தொட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே கடந்து சென்றது. முழங்கால் அளவுக்கு மழை நீர் ரோட்டை கடந்து சென்றதால் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. தண்ணீர் ஓரளவு வடிந்த பின்னர் போக்குவரத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

மழை பெய்து கொண்டிருந்தபோது பவானியில் இருந்து அந்தியூர் நோக்கிச் சென்ற கார் நிலைதடுமாறி தொட்டிபாளையம் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த 4 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில், மின்கம்பம் முறிந்து சேதமானது. பவானி வட்டாரப் பகுதிகளில் பெய்த மழை நீர் காடையம்பட்டி ஏரிக்கு பெருக்கெடுத்து வந்ததால் ஏரிக்கரையோரம் பாதையில் வெள்ளநீர் சூழ்ந்தது.

சுமார் 20 ஏக்கர் மேற்பட்ட பரப்பளவில் நெல் கரும்பு வயல்களில்  மழைநீர் தேங்கி நிற்கிறது. கடையம்பட்டி ஏரிக் கரையை ஒட்டியுள்ள தாளபையனூரில் உள்ள அங்கன்வாடி மையம் தண்ணீரால் சூழப்பட்டது. அங்கிருந்த விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த எருமைகள், மாடுகள், ஆடுகள் தண்ணீரில் தத்தளித்தன. இதைக்கண்ட பொதுமக்கள் கால்நடைகளை பத்திரமாக மீட்டு மேடான பகுதிக்கு கொண்டு வந்தனர். மழைநீர் பாதித்த பகுதிகளில் தொட்டிபாளையம் ஊராட்சி தலைவர் செல்வராஜ், ஊராட்சி எழுத்தர் மாரியப்பன் பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

காடையம்பட்டி ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றுக்கு சென்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் பெய்த மழை நீர் காளிங்கராயன் அணைக்கட்டு வினாடிக்கு 5,642 கன அடி வீதம் வந்து கொண்டுள்ளது. பவானியில் மழை அளவு 48.8 மில்லி மீட்டராகவும், கவுந்தப்பாடியில் 62 மில்லி மீட்டராகவும் பதிவானது.
மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது மழை நீர் வடிந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : Vidya Vidya ,Bhavani , Bhavani: Heavy rains lashed low-lying areas of Bhavani and surrounding areas last night.
× RELATED திருச்சியில் சிக்கிய ரூ.1 கோடி அதிமுக...