கமுதி முத்துமாரியம்மன் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம்

கமுதி : கமுதி முத்துமாரியம்மன் நகர் பகுதி முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது. தேங்கிய நீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய் மற்றும் குண்டாற்றின் பல இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளது. செட்டி ஊரணி, பாகிஸ்தான் ஊரணி, வண்ணார் ஊரணி மற்றும் சில ஊரணிகள் மழைக்காலம் பாதி முடிவதற்குள் இப்போதே நிரம்பி வருகின்றன. இன்னும் சில நாட்கள் மழை பெய்தால் சில ஊரணிகள் உடைப்பு ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளது. மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து குடியிருப்புகள் ஆங்காங்கே தீவு போல காட்சியளிக்கிறது.

பெரிய பள்ளிவாசல் பகுதியின் பின்புறம் உள்ள முத்துமாரியம்மன் நகர் பகுதி முற்றிலும் மழைநீரால் சூழப்பட்டு தீவு போல காட்சியளிக்கிறது. இப்பகுதியில் சுமார் 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு நடந்து செல்பவர்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டும். இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் இதில் வரும்போது மிகப்பெரிய பேராபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும் இப்பகுதி முழுவதும் ஒரு வாரமாக மழைநீர் தேங்கியுள்ளதால், கொசுகள் உற்பத்தியாகி நோய்களின் பிறப்பிடமாக உருவெடுத்துள்ளது. அதேபோல் காளியம்மன் கோவில் தெரு மற்றும் காலனி பகுதிகளில், மழைநீர் தேங்கி கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல்,பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், அவைகள் கோழி மற்றும் நாய்களால் சிதறடிக்கப்பட்டு, துர்நாற்றத்துடன் நோய்களை பரப்பி வருகிறது.

குறிப்பாக நகரின் மையப்பகுதில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே காய்கறிக் கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதி எப்போதும் துர்நாற்றம் அடித்து கொண்டே நோய்களின் பிறப்பிடமாக உள்ளது. இதற்கு ஆரம்ப அறிகுறியாக கடந்த 10 நாட்களாக கமுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரப்பி வருகின்றன. எனவே பேரூராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி,போர்க்கால நடவடிக்கை எடுத்து தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் பேரூராட்சியுடன் இணைந்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: