×

குமரியில் ஸ்கூபா டைவிங் பயிற்சி முடித்த 25 கமாண்டோ வீரர்களுடன் வெள்ள மீட்பு நடவடிக்கைக்கு தீயணைப்பு துறை தயார்-மாவட்ட அதிகாரி பேட்டி

நாகர்கோவில் :  குமரியில் வெள்ள பாதிப்பு நிலை வந்தால், மீட்பு நடவடிக்கைக்காக தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் கூறினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து தற்போது பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தீபாவளி வரை மழை வெளுத்து வாங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் வரும் 4 நாட்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன.

குமரி மாவட்டத்திலும் வெள்ள மீட்பு பணிக்காக தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர். நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் உள்ள உபகரணங்களை, நேற்று மாவட்ட தீயணைப்பு அலுலவர் (பொறுப்பு) சத்யகுமார் ஆய்வு செய்தார். மரங்களை வேகமாக அப்புறப்படுத்தும் பவர் ஷா இயந்திரங்கள், மீட்பு படகுகள், தண்ணீரை வெளியேற்றும் மின் மோட்டார்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மீட்பு பணிக்காக தயார் நிலையில் இருக்கும்படி தீயணைப்பு துறை இயக்குனர் கரன்சின்ஹா உத்தரவிட்டார். தென் மண்டல துணை இயக்குனர் மேற்பார்வையில், குமரி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலும் மீட்பு பணிக்கான உபகரணங்கள் மற்றும் வீரர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து தகவல்களை பெற்று விரைந்து செல்லும் வகையில், அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பட்டியலிட்டு, அந்த பகுதிகளுக்கு வேகமாக விரைவது எப்படி? என்பது தொடர்பான பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஸ்கூபா டைவிங் (நீருக்கடியில் சுவாசிப்பு திறன் பயிற்சி பெற்றவர்கள்) பயிற்சி பெற்ற 25 கமாண்டோ வீரர்கள் உள்ளனர்.

இவர்கள் மூச்சு எந்திரத்தை முதுகில் சுமந்து கொண்டு நீண்ட நேரம் தண்ணீருக்குள் மூழ்கி இருந்து தேடும் திறன் கொண்டவர்கள் ஆவர். இவர்களும் தயார் நிலையில் உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தண்ணீர் விரைவாக வௌியேற்ற 11 பம்புகள்  உள்ளன. 7 இன்ஜின் படகுகள் உள்ளன.

 பொதுமக்கள் வெள்ளம் அதிகம் உள்ள பகுதிகளை பார்வையிட செல்வது, செல்பி எடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.  மாணவர்கள், சிறுவர்களை ஆறு, குளங்களுக்கு தனியாக குளிக்க அனுப்ப வேண்டாம். மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படி, தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள், கரையோர பகுதிகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது குமரி உதவி கோட்ட அலுவலர் இம்மானுவேல், நாகர்கோவில் நிலைய அலுவலர் (பொறுப்பு) பென்னட் தம்பி மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கோயில் குளத்தில் ஒத்திகை

நேற்று மாலை திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் தெப்பக்குளத்தில், தீயணைப்பு துறை சார்பில் வெள்ள மீட்பு ஒத்திகை நடைபெற்றது. தண்ணீரில் மூழ்கியவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும். முதலுதவி செய்வது எப்படி? என்பது பற்றி தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதை அந்த பகுதி பொதுமக்கள் பார்வையிட்டனர்.  வெள்ள காலங்களில் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதிகளில் திருப்பதிசாரமும் ஒன்றாகும். கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் போது, திருவாழ்மார்பன் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காலி தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தி உயிர் தப்பலாம்

தீயணைப்பு துறையினர் கூறுகையில், திடீரென வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருப்பவர்கள், தங்கள் வசம் உள்ள சாதாரண பொருட்களை பயன்படுத்தி கூட உயிர் தப்பலாம். குறிப்பாக காலியாக உள்ள 1 லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை 4 அல்லது 5 எடுத்து, உடலோடு சேர்த்து கட்டிக்கொண்டு நீந்தலாம். இவ்வாறு நீந்தும் போது தண்ணீரில் மூழ்க மாட்டோம். ஏதாவது ஒரு பகுதியில் வாய்ப்பு கிடைக்கும் போது கரையேறிட முடியும். முதலில் பதற்றம் அடைய கூடாது என்றனர்.


Tags : Kumari , Nagercoil: The district fire officer said that the fire department is ready for rescue operations in case of floods in Kumari.
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...