திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியில் மின்சாரம் பார்க்காத இருளர் இன மக்களுக்கு வீடு கட்டித்தர ஏற்பாடு-டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியில் மின்சாரம் பார்க்காத இருளர் இன மக்களுக்கு தினகரன் செய்தி எதிரொலியால் வீடு கட்டித்தர மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், கந்திலி ஊராட்சியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தனி தாலுகா அந்தஸ்து உள்ள கந்திலி ஊராட்சி பகுதியில் இருளர் இன மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் நாடோடிகளாக ஆங்காங்கே சென்று எலி, பாம்பு உள்ளிட்டவைகளை பிடித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கி வாழ்ந்து வருகின்றனர். மேலும், ஒரு சிலர் படிப்பறிவு இல்லாமலும் கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இருளர் இன மக்கள் நாடோடிகளாக இருந்த காரணத்தினால் அவர்கள் ஊர் ஊராக சென்று தற்காலிக கொட்டகை அமைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்த சூழலில் கந்திலி ஒன்றியத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 50க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் மற்றும் அருந்ததியினர், இஸ்லாமிய சமுதாயத்தினர் இருந்து வருகின்றனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வீடுகள் இல்லாமலும், சுதந்திரம் அடைந்து தற்போது வரை குடிசை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

அவ்வாறு குடிசை வீட்டில் வசிக்கும் மக்கள் மின்சாரம், குடிநீர், கால்வாய், கழிப்பறை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளின்றி தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்தும் இன்றும் இருளர் இன மக்கள் மின்சாரத்தை பார்க்காத ஒரு கிராமமாக இந்த பகுதி இருந்து வருகிறது. இதுகுறித்து விரிவான செய்தி நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், சப்-கலெக்டர் பானு, கிராம ஊராட்சி உதவி இயக்குனர் விஜயகுமாரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதி மக்களுக்கு, சின்னுமலை அடிவாரத்தில் அரசு சொந்தமான இடத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதைக்கேட்டு இருளர் இன மகிழ்ச்சியடைந்தனர்.மேலும், தினகரன் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு வீடுகள் வழங்க ஒதுக்கீடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: