நெமிலி அருகே ஏரிகள் நிரம்பின சாலை துண்டிப்பால் 10 கிராம மக்கள் பாதிப்பு-அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு

நெமிலி : நெமிலி அருகே ஏரிகள் நிரம்பி உபரிநீரானது வழிந்தோடி வருகிறது. பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த புத்தேரி மற்றும் சிறுணமல்லி ஆகிய ஏரிகள் முழுவதும் நிரம்பி உபரிநீரானது அங்குள்ள வயல்வெளி வழியாக சிறுணமல்லி- கீழ்களத்தூர் சாலையில் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

 இதன் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு அந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால்  மானாமதுரை, கீழ்களத்தூர், வெளிதங்கிபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தகவலறிந்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், டிஆர்ஓ ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், அங்குள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி ஏரியின் உபரிநீரானது தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.அப்போது, தாசில்தார் ரவி, ஊரக உள்ளாட்சி திட்ட இயக்குனர் லோகநாயகி, ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் சுந்தரம்மாள் பெருமாள், மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவீந்திரன், காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் மாணிக்கம்,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பெருமாள், நகர செயலாளர் ஜனார்த்தனன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காவேரிப்பாக்கம்:  

காவேரிப்பாக்கம் ஏரி கடைவாசல் பகுதியில் அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஏரிக்கரையின் உறுதித்தன்மை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஏரிக்கான நீர்வரத்து, ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் ஆகியன குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.மேலும், மகேந்திரவாடி ஏரி,  தக்கோலம் ஏரி, உளியநல்லூர் ஏரி, வேட்டாங்குளம் ஏரி, ரெட்டிவலம் ஏரி, துறையூர் ஏரி, கல்லேரி, சையனாபுரம் ஏரி உள்ளிட்ட 41 ஏரிகளின்  விவரங்களையும் கேட்டறிந்தார்.

அப்போது, மூலமதகை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, கடப்பேரி பகுதியில் உள்ள வரத்து கால்வாய், பாலாற்றில் இருந்து  ஓச்சேரி  வழியாக கோவிந்தவாடி ஏரிக்கு செல்லும் மக்கிலியன் கால்வாயை ஆய்வு செய்தார்.

பாணாவரம்:

பாணாவரம் அருகே 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மகேந்திரவாடி கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிரம்பி கோடி போனது. இந்நிலையில், ஏரிக்கான நீர்வரத்து, ஏரிக்கரையின் உறுதித்தன்மை, பொதுமக்களின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியன குறித்து அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன்,  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குனர் லோகநாயகி, உதவி செயற்பொறியாளர் நீர்வள ஆதார துறை பிரபாகரன்,  நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேல், திமுக ஒன்றிய செயலாளர் சி.மாணிக்கம்,  பேரூராட்சி செயலாளர் பாஸ்(எ) நரசிம்மன், ஒன்றிய கவுன்சிலர் தீபா  கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் ரவீந்திரன்,  தாசில்தார் ரவி, ஆர்ஐ தினகரன், ஊராட்சி மன்ற தலைவர் பரணிகுமார், ஊராட்சி செயலர் ராஜாராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ரெட் அலர்ட் பகுதிகளில் ஆர்டிஓ ஆய்வுகலவை தாலுகா பென்னகர், சென்னசமுத்திரம், வாழைப்பந்தல் ஆகிய பகுதிகள் ரெட் அலர்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஆர்டிஓ பூங்கொடி நேற்று நேரில் ஆய்வு செய்து மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும். மழைநீர் தேங்காதபடி பார்த்து கொள்ள வேண்டும். சென்னசமுத்திரம் கிராமத்தில் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரால் சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: