தீபாவளி கொண்டாட்டம் முடிந்தது நாமக்கல் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

நாமக்கல் : தீபாவளி தொடர் விடுமுறை முடிந்ததையொட்டி, நாமக்கல் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெருநகரங்களில் வேலை பார்ப்பவர்கள், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர். தொடர் விடுமுறை முடிந்ததை தொடர்ந்து அவர்கள் நேற்று மாலை முதலே மீண்டும் பணியிடங்களுக்கு செல்ல தொடங்கினர்.

இதனால், நாமக்கல் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை மற்றும் விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், நேற்று மாலை குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால், நாமக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து அவதி அடைந்தனர். குறிப்பாக தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டன.

குறிப்பாக ஈரோடு, சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக அளவில் சென்றனர். இதனால், அந்த ஊர்களுக்கு செல்லும் பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் டவுன் பஸ்களை தொலை தூரத்துக்கு இயக்கப்பட்டன.

தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் இடைப்பட்ட ஊர்களுக்கு செல்பவர்களை பேருந்துகளில் ஏற்ற நடத்துனர் மறுத்தனர். பின்னர், பேருந்தில் இருக்கை முடிந்த பிறகு அவர்களை ஏற்றினர். இதனால், குழந்தைகளுடன் வந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனிடையே, சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு டிக்கெட் ₹1300 முதல் ₹1500 வரை ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. கட்டணக் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

Related Stories: