×

வேலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை கன்சால்பேட்டை குடியிருப்பு பகுதியில் கழிவுநீருடன், மழைநீர் புகுந்தது-கலெக்டர் நேரில் ஆய்வு

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் மழை பெய்வதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்ததால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதேபோல், வேலூர் மாநகராட்சி கன்சால்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், கழிவுநீருடன், மழைநீர் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

சுமார் ஒன்றரை அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்ததால் பலர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். சில குடும்பத்தினர் வீட்டின் மேல்தளத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தனர். தகவலறிந்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று கன்சால்பேட்டை பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, தண்ணீர் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை உடனடியாக அருகில் உள்ள பள்ளிக்கு செல்லுமாறும் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்யுமாறும் வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அப்பகுதியில் உள்ள தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் உடனடியாக வெளியேற்றவும், அப்பகுதியில் தண்ணீர் வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக ஜேசிபி மூலம் உடைத்து தண்ணீர் தேங்காமல் இருக்க வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்.

இதைத்தொடர்ந்து பொய்கை மோட்டூர் பகுதியில் உள்ள கால்வாயை ஆய்வு செய்து, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குடியிருப்பு பகுதிகளுக்கு சொல்வதை தவிர்க்க மணல் மூட்டைகள் மூலம் தடுப்பணை அமைத்து மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ேவலூரில் அதிகபட்சமாக 22.30 மி.மீ மழை

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக வேலூரில் 22.30 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் பதிவான மழையளவு மி.மீட்டரில்: குடியாத்தம் 2.20, காட்பாடி 14, மேல்ஆலத்தூர் 1.30, பொன்னை 15.20, வேலூர் 22.30, விசிஎஸ் சர்க்கரை ஆலை 13.60. மாவட்டத்தில் பதிவான மொத்த மழையளவு 68.60. சராசரி 11.43 மி.மீ. மழை பதிவானது.

Tags : Vidya ,Vellore district ,Consulpet , Vellore: The Vellore district has been receiving heavy rains for the last few days. Also in Andhra Pradesh and Karnataka due to rains
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...