×

வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள் விழாவை “தமிழ் அகராதியியல் நாள்” ஆகக் கொண்டாடப்பட்டும்: தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: வீரமாமுனிவர் அவர்களின்  பிறந்த நாள் விழா, நம் அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவரும், அந்நிய நாடான இத்தாலியில் பிறந்தாலும்,  நம் தாய் நாடாம் தமிழ்நாட்டில் கால்பதித்து, உலகின் மூத்த மொழியாம் நம் தமிழ் மொழியின்பால் ஈர்க்கப்பட்டு, தமிழ் மீது கொண்டிருந்த தணியாத தாகத்தினால், கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்கிற தனது பெயரைத் துறந்து, அன்புள்ளங் கொண்ட தமிழ் மக்களால் அழகுற வீரமாமுனிவர் என்றழைத்து போற்றிப் புகழப்பட்ட தமிழ் முனிவராம் வீரமாமுனிவரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள  அன்னாரது திருவுருவச் சிலைக்கு இன்று (08.11.2021) காலை 9.30 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்கயல்விழி செல்வராஜ்  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப.,  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இத்தாலியில் உள்ள காஸ்டிகிளியோன் என்ற ஊரில் கண்டல்போ பெஸ்கி - எலிசபெத் தம்பதியருக்கு மகனாக கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி அவர்கள் 1680 ஆம் ஆண்டு பிறந்தார்.  1698 ஆம் ஆண்டு பெஸ்கி அவர்கள் இயேசு சபையில் சேர்ந்து  லத்தீன், பிரெஞ்சு, கிரீக் மொழிகளை கற்று அதில் நல்ல புலமையும் பெற்றதோடு வேத சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து  பின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1813ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தனது மறைப்பணி பொருட்டு, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று இறுதியாக, திருநெல்வேலி வடக்கன்குளம், கயத்தாறு பகுதியில் ஞானப் பணியினைத் தொடர்ந்தவர், தமிழ் மொழியின் மீது கொண்டிருந்த வற்றாத பற்றின் காரணமாக, தமிழ்மொழியினைப் பிழையின்றி கற்றிடத் தொடங்கினார். “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினிற்கேற்ப, அந்நிய நாட்டில் பிறந்து நம் அமுதத் தமிழ்பால் கொண்டிருந்த அளவற்ற ஆர்வத்தினையும் வற்றாத தமிழ்ப் புலமையினையும் கண்டு வியந்த நம் தமிழ் மக்கள், அவரை வீரமாமுனிவர் என்றே அன்புடன் அழைத்ததை பெருமையோடு ஏற்றுக் கொண்டு, தன்வாழ்நாளின் இறுதிவரை வீரமாமுனிவர் என்றே வலம் வந்து சிறந்துயர்ந்தார் என்றால் அது மிகையில்லை.

அழகுத் தமிழில் அரிய பல இலக்கியப் படைப்புகளையும் இலக்கண நூல்களையும் எழுதி இருந்தாலும், தமிழ்மொழி இதுவரை காணாத வகையில் தமிழ்ச்சொற்களுக்கு அகரமுதலி எழுத்து வரிசையில் முதல் தமிழ் அகராதியாம் “சதுரகராதி” உருவாக்கி சாதனை படைத்து  தமிழ் வரலாற்றில் உச்சம் தொட்டார். ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தும் அகரமுதலி எழுத்து வரிசையில் தொகுத்து அவற்றிற்கான பொருளை அதே மொழியிலோ, வேறொரு மொழியிலோ எடுத்துரைப்பதும், சொல்லின் பொருளோடு அதன் உச்சரிப்பு, தோற்றம், இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள இடம், அது வழங்கும் நாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியதே சதுரகராதி ஆகும். முதுமொழியாம் தமிழ் மொழியின் பொருள் கூறும் நிகண்டுகள் பல இருந்தாலும், நிகழ்காலத்தில் தமிழ் மொழியின் செம்மையினை வெளிப்படுத்தும் முதல் அகராதியை உருவாக்கி அதற்கு ‘கருவூலம்’ என்று பெயர் சூட்டிய பெருமையும் தமிழ் முனியாம் வீரமாமுனிவரையே சாரும்.

தனது தமிழ்ப் பணியை தொய்வின்றி தொடர்ந்து தொன்மை வாய்ந்த திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றின் அருமை பெருமைகளை அயல்நாட்டினரும் அறிந்து பயன்பெறுகின்ற வகையில், அய்ரோப்பிய மொழியிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.  
தன் வாழ்நாளின் இறுதிவரையில் தமிழ்மொழியின்பால் அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றின் காரணமாகவும், தமிழுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய தொண்டினைப் போற்றிடும் வகையில், வீரமாமுனிவருக்கு 1968 ஆம் ஆண்டு பேரறிஞப் பெருந்தகை அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியினால் வீரமாமுனிவர் அவர்களின் திருவுருவச் சிலையானது சென்னை மெரினா கடற்கரையில் நிறுவப்பட்டு அவருடைய பிறந்த நாளான இன்று (08.11.2021) அரசு விழாவாக ஆண்டுதோறும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ‘தமிழகராதியின் தந்தை’ எனப் போற்றப்படும் வீரமாமுனிவரின் பிறந்தநாளினப் போற்றிடும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் “தமிழ் அகராதியியல் நாள்” ஆகக் கொண்டாடப்பட்டும் வருகிறது.

Tags : Veeramamunivar ,Tamil Dictionary Day ,Industry Minister ,Thangam Tennarasu , Delhi, Padma Award, SBP, Padma Vibhushan, Award
× RELATED மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு 7.37...