தொடர் மழை காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் எழும்பூர் ரயில்நிலையத்திற்கு தாமதமாக வந்தது: பயணிகள் கடும் அவதி

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியதால் தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் தாமதமாக வந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையடுத்து தீபாவளி பண்டிக்கைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் தென்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு  சென்றனர். இதையடுத்து தீபாவளி பண்டிகையை முடித்து விட்டு முன்பதிவு செய்தவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் வழக்கம் போல் சென்னைக்கு திரும்பினர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லேசான மழை பெய்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் ரயில் ஓட்டுநர்கள் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து கடும் சிரமமத்திற்கு மத்தியில் ஆங்காங்கே ரயில்களை நிறுத்தியும் மழையின் அளவு குறைந்த பிறகு ரயில்கள் இயக்கியும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். ரயில் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கும் மத்தியில் ரயில்களை இயக்கி வந்தனர்.

மேலும் தொடர் மழை பெய்து வருவதால் எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை 1 முதல் 3 வரை உள்ள தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின. எழும்பூர் ரயில் நிலையத்தை இணைக்கும் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தன. இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக முதல் 2 நடைமேடையில் இருந்து இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் மாற்று நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டது.

இதனால் வழக்கமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்தும் தாமதமாகின. எழும்பூர் ரயில் நிலையத்துக்கு தென் மாவட்டங்களில் இருந்து வரும் முக்கிய ரயில்களான ராமேஸ்வரம், முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ்கள் அனைத்தும் தாமதமாக வந்தடைந்தது.

மேலும் ரயில்நிலையத்தில் இருந்து ஒரு ரயில் புறப்பட்டு வெளியே சென்றவுடன் அடுத்த ரயில் உள்ளே வரும் சூழல் ஏற்பட்டதால், மற்ற ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளாகினர். வழக்கமாக எழும்பூர் வரும் நேரத்தை விட தாமதமானதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். சில ரயில்கள் வழக்கமான நேரத்தை விட 3 மணி நேரம் தாமதமாக எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தன.

இதனால் நீண்ட தூரத்தில் இருந்து வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Related Stories:

More