சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வங்க மற்றும் அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, வட தமிழகத்தில் 2 நாட்களாக மிக கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழக கடலோரப் பகுதிக்கு வந்தது. அதேநேரத்தில் அரபிக் கடல் பகுதியிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 3 கிமீ உயரத்தில் உருவாகி வடகிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இந்த இரண்டு வானிலை நிகழ்வுகளால், வடதமிழகத்தில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

இதையடுத்து 6ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் பெய்ய தொடங்கிய மழை மெல்ல மெல்ல அதிகரித்து மிக கனமழையாக இரவு முழுவதும் நீடித்தது. அதிகபட்சமாக அன்று இரவு மட்டும் 6 செமீ முதல் மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் பகுதியில் 23 செமீ வரை மழை கொட்டித் தீர்த்தது. நுங்கம்பாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் 21 செமீ, அயனாவரம் 18 செமீ, அண்ணா பல்கலைக்கழகம் 16 செமீ, புழல் 15 செமீ, சென்னை விமான நிலையம் 11 செமீ, சோழவரம் 9செமீ, ஆலந்தூர் 7 செமீ மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்பதால் ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டது. அதன்படி, மேற்கண்ட இடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.

மேலும், புதுக்கோட்டை , ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழையும் , இந்நிலையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், வளி மண்டல மேலடுக்கில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சத் தொடங்கியுள்ளது. அதேபோல, வடதமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள கடலோரப் பகுதியில் சுமார் 3 கிமீ உயரம் வரை நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்.

இது தவிர தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளதால் 10 மற்றும் 11ம் தேதிகளிலும் மழை பெய்யும். தற்போது மழை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்துக்கான தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை  பெய்யும். சென்னையிலும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.  வங்கக் கடலில் ஆழ் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகின்றனர். 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

* தமிழகத்தில் 43% கூடுதல் மழை

அக்டோபர் 1 முதல் நவம்பர் 7ம் தேதிவரை தமிழகத்தில் பெய்த மழையில், கோவையில் இயல்பைவிட 113 மிமீ மழை அதிகமாக பெய்துள்ளது. கரூரில் இயல்பைவிட 103 மிமீ அதிகம் பெய்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பாக 233 மிமீ மழை பெய்ய வேண்டும். அதற்கு பதிலாக 332 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 43 சதவீதம் கூடுதலாக உள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரையில் அதிகபட்சமாக கோவையில் தான் பதிவாகியுள்ளது. அங்கு இயல்பாக 209 மிமீ பெய்ய வேண்டும். ஆனால் 447 மிமீ பெய்துள்ளது. கரூரில் இயல்பாக 164 பெய்ய வேண்டும். ஆனால், 332 மிமீ பெய்துள்ளது. இந்த இரண்டு பகுதிகள் தான் இதுவரை பெய்த மழையில் அதிகபட்ச மழையை பெற்றுள்ளன. சென்னையில் இயல்பாக 381 பெய்ய வேண்டும். ஆனால் நேற்றுவரை 480 மிமீ பெய்துள்ளது. இது இயல்பைவிட 26 சதவீதம் அதிகம்.

Related Stories:

More