×

கேப்டன் பாபர், மாலிக் அதிரடி அரை சதம்

ஷார்ஜா: ஸ்காட்லாந்து அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (பிரிவு 2), கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் சோயிப் மாலிக் அதிரடியில் பாகிஸ்தான் 189 ரன் குவித்தது. ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. ரிஸ்வான், பாபர் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ரிஸ்வான் 15 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த பகார் ஸமான் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் 9.4 ஓவரில் 59 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், பாபர் - ஹபீஸ் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது. ஹபீஸ் 31 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.

பொறுப்புடன் விளையாடிய பாபர் அரை சதம் அடித்தார். அவர் 66 ரன் (47 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கிரீவ்ஸ் பந்துவீச்சில் முன்சி வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சோயிப் மாலிக் 18 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. மாலிக் 54 ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்), ஆசிப் அலி 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது.

* 2022 உலக கோப்பையில்...
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் விளையாட, நேரடியாகத் தகுதி பெற்ற 8 அணிகள் பற்றிய விவரத்தை ஐசிசி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Baber , Captain Baber, Malik Action Half Cent
× RELATED பாபர் - ரிஸ்வான் அசத்தல்: 2வது டெஸ்ட் டிரா