×

கேன், கான்வே பொறுப்பான ஆட்டம் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது நியூசி: இந்தியா ஏமாற்றம்/வெளியேற்றம்

அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (2வது பிரிவு) 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஹஸ்ரதுல்லா, ஷாஷத் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஷாஷத் 4 ரன் எடுத்து மில்னி பந்துவீச்சில் வெளியேற, ஹஸ்ரதுல்லா 2 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் சான்ட்னர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரகமதுல்லா குர்பாஸ் 6 ரன் எடுத்து சவுத்தீ வேகத்தில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் 5.1 ஓவரில் 19 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், குல்பாதின் நயிப் - நஜிபுல்லா ஸத்ரன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தது. குல்பாதின் 15 ரன் எடுத்து சோதி சுழலில் கிளீன் போல்டானார். இதையடுத்து, நஜிபுல்லாவுடன் கேப்டன் முகமது நபி இணைந்தார். அதிரடியாக விளையாடிய நஜிபுல்லா 33 பந்தில் அரை சதம் அடித்தார். நஜிபுல்லா - நபி ஜோடி 59 ரன் சேர்த்தது. நபி 14 ரன் எடுத்து சவுத்தீ பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, நஜிபுல்லா 73 ரன் (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி போல்ட் பந்துவீச்சில் நீஷம் வசம் பிடிபட்டார். கரிம் ஜனத் 2, ரஷித் கான் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் மட்டுமே சேர்த்தது. முஜீப் உர் ரகுமான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட் 3, சவுத்தீ 2, மில்னி, நீஷம், சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 125 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. மார்டின் கப்தில், டேரில் மிட்செல் இருவரும் துரத்தலை தொடங்கினர். மிட்செல் 17 ரன் எடுத்து முஜீப் பந்துவீச்சில் ஷாஷத் வசம் பிடிபட்டார். கப்தில் 28 ரன் எடுத்து ரஷித் சுழலில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். நியூசிலாந்து 8.5 ஓவரில் 57 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து சற்றே தடுமாறியது. இதனால் உற்சாகமடைந்த ஆப்கான் வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.
ஆனால், கேப்டன் கேன் வில்லியம்சன் - டிவோன் கான்வே ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாட, நியூசிலாந்து 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து வென்றது. வில்லியம்சன் 40 ரன் (42 பந்து, 3 பவுண்டரி), கான்வே 36 ரன்னுடன் (32 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிரென்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

நியூசிலாந்து அணி 5 லீக் ஆட்டத்தில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 2வது பிரிவில் பாகிஸ்தான் அணி (8 புள்ளி) ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதால் இந்திய அணியின் அரையிறுதி கனவு பரிதாபமாகக் கலைந்தது. இந்தியா - நமிபியா அணிகளிடையே இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டம் வெறும் சம்பிரதாயமான போட்டி தான். ஆப்கானிடம் நியூசிலாந்து தோற்க வேண்டும் என ஆவலோடு காத்திருந்த... பிரார்த்தித்த! இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Tags : Kane ,Conway ,Afghanistan ,Zealand ,India , Kane, Conway responsible Afghanistan beat Afghanistan by 8 wickets New Zealand: India disappointed / eliminated
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...