இந்திய வரலாற்றில் முதல்முறை எல்லையில் சாலை போடும் பணியில் களமிறங்குகிறது இந்தோ-திபெத் படை

புதுடெல்லி: இந்திய-சீன எல்லையில் சாலைகள் மற்றும் நடைபாதைகளை அமைக்கும் பணியில், இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படை வரலாற்றில் முதல் முறையாக களமிறங்க உள்ளது. இந்தியா-சீனா இடையே 3,488 கிமீ எல்லை அமைந்துள்ளது. இதன் பாதுகாப்பு பணியை இந்தோ - திபெத் எல்லை படை கவனித்து வருகிறது. இவற்றில் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய எல்லைகளில் இரு நாட்டு படைகள் இடையே அவ்வப்போது எல்லைப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, லடாக்கில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. அதோடு, எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா தொடர்ந்து பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.

அதற்கு பதிலடியாக இந்தியாவும், சீன எல்லையை விரைவில் அடைய, புதிய சாலைகளை அமைத்து வருகிறது. இத்திட்டத்தின் 2ம் கட்டமாக 32 சாலைகள் மற்றும் 18 நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 4 சாலைகளையும், ரோந்து பணிகளுக்காக 2 நடைபாதைகளையும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை தனது படைப்பிரிவில் உள்ள பொறியாளர்கள் பிரிவைக் கொண்டு கட்டமைக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இத்தகைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இதுவரை எல்லை சாலைகள் அமைப்பும், ஒன்றிய பொதுப்பணி துறையும் எல்லைச் சாலைகளை அமைத்து வந்தன. லடாக் போன்ற அதிக உயரமான, சிக்கலான மலைப்பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கான ஒப்பந்ததாரர்கள் கிடைப்பது கடினம். இதனால், சாலை அமைக்கும் பணி மெதுவாக நடந்து வருவதை தவிர்க்கவே, இந்தோ-திபெத் படை நேரடியாக களமிறங்கி உள்ளது.

Related Stories: