டெல்டாவில் விடிய விடிய பலத்த மழை: திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சேலத்தில் 6 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் கனத்த மழை பெய்து வந்ததால் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில்  மூழ்கியது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 4 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. கடலோர பகுதிகளில் நேற்று அதிகாலை கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் மயிலாடுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. திருச்சி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் மரம் விழுந்து மகாமுனி(60) என்பவர் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோட்டைக்காடு கிராமத்தை  சேர்ந்த கண்ணன் (20). அதேபகுதியை சேர்ந்த அசோக் (20). நேற்று அந்த பகுதியில் உள்ள நீர்பள்ளம் என்ற குளத்தில் இருவரும் குளிக்க  சென்றனர். ஆழமான பகுதியில் மூழ்கி இருவரும் பலியாகினர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூரில் கருங்குளம் கண்மாய் உள்ளது. நேற்று இந்த கண்மாய் மடை திடீரென உடைந்து, வெளியேறிய நீர், வயல்களுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 300 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (30). பொக்லைன் இயந்திர டிரைவர். நேற்று முன்தினம் நொண்டியாற்று ஓடையை ராஜசேகரன் கடக்க முயன்றார். தொடர்மழை காரணமாக, ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்பகுதியினர் எச்சரித்தும், ஓடைக்குள் இறங்கியவரை வெள்ளம் இழுத்து சென்றது. அதேபோல் சாப்டூர் அருகே சதுரகிரி மகாலிங்கம் மலைக்கோயில் கேணியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் குளிக்க வந்துள்ளனர். இங்கும் காட்டாற்று வெள்ளம் அதிகமாக இருந்தது. விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பிகாம் சி.ஏ மாணவர் முகம்மது முஸ்தபா (20), வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். நேற்று இருவரது உடலும் மீட்கப்பட்டது.

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சுற்றியுள்ள ஏரிகளில் நீர் நிரம்பி வழிகிறது. பல இடங்களில் நீர்நிலைகள், கால்வாய் பகுதிகளையொட்டி உள்ள விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. மழை காரணமாக 50 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமாகியுள்ளது.

சேலம்: சேலம் களரம்பட்டி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் அங்கப்பன் (58), கொத்தனார். இவர் நேற்று காலை 11 மணியளவில், எருமாபாளையம் ஒன்பதாம்பாலியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார். கடையின் இரும்பு கம்பி தடுப்பில் கைவைத்தபடி மது பாட்டில் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது மழை காரணமாக அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அங்கப்பன் பலியானார்.

Related Stories:

More