×

கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை பூண்டியில் இருந்து 4,873 கனஅடி உபரி நீர் திறப்பு: புழல் 2,000 கன அடி, செம்பரம்பாக்கம் 1,000 கன அடி, சோழவரம் 1,215 கனஅடி நீர் வெளியேற்றம்

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மொத்தம் உள்ள 35 அடி உயரத்தில் 34.20 அடி உயரத்திற்கு  தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில்  தற்போது 2886 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.

தொடர்ந்து பெய்து  வரும் மழை காரணமாக நீர் வரத்து 3206 கன அடியாக உள்ளது. இதனால் பூண்டியிலிருந்து நேற்று காலை 8 மணி அளவில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. மழை நீர் வரத்து, ஆந்திர மாநிலம், அம்மம்  பள்ளி அணை, கண்டலேறு நீர் வரத்து போன்றவைகளால் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே  வருகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி காலை முதல் பிற்பகல் வரையில் 3  ஆயிரம், 4 ஆயிரம், கன அடி என உபரி நீர் வெளியேற்றம் என்பது, மாலை 6 மணி  அளவில் 4,873 கன அடியாக அதிகரித்துள்ளது.

 இந்த உபரி நீர்  பூண்டிலியிருந்து கொசஸ்தலை ஆற்றின் வழியாக நம்பாக்கம், ஒதப்பை, எறையூர்,  அரும்பாக்கம், வெள்ளியூர், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, திருக்கண்டலம்,  பண்டிகவனூர், வன்னிப்பாக்கம், சீமாவரம், வெல்லிவாயல்சாவடி, நாப்பாளையம்,  இடையஞ்சாவடி, மணலி, சடையான்குப்பம் மற்றும் எண்ணூர் துறைமுகம் வழியாக  சென்று கடலில் கலக்கும். எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாதுகாப்பு எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

செம்பரம்பாக்கம்: தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் விநாடிக்கு 500 கன அடி வீதம் வெளியேறும் வகையில், நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால், கூடுதலாக 500 கன அடிநீர் என மொத்தம் 1000 கன அடி உபரிநீர் நேற்று மாலை வரை திறந்து விடப்பட்டது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளான குன்றத்தூர், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், காவனூர், வழுதலம்பேடு மற்றும் திருநீர்மலை ஆகிய ஆறு கிராமங்களுக்கு நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை அரசு சார்பில் விடப்பட்டது. அதனை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புழல் ஏரி: புழல் ஏரி நீர்யின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது 2,872 மில்லியன் கனஅடி நீர் உள்ளது.. கனமழை காரணமாக, ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,487 கன அடியாக உள்ளது. இங்கிருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக 191 கன அடிநீர் வினாடிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் புழல் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. இதையடுத்து, நேற்று நேற்று மாலை 6 மணியளவில், 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

சோழவரம் ஏரி:   18.86 அடி கொண்ட சோழவரம் ஏரியில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 18.14 அடி நீர் இருப்பு இருந்தது. மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1215 கன அடியாக இருந்தது. எனவே, ஏரியில் இருந்து வினாடிக்கு 1215 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

Tags : Poondi ,Puhal ,Sembarambakkam ,Cholavaram , Safety warning for coastal people 4,873 cubic feet of surplus water from Poondi: Puhal 2,000 cubic feet, Sembarambakkam 1,000 cubic feet, Cholavaram 1,215 cubic feet discharge
× RELATED வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்