திருப்போரூர் ஒன்றியத்தில் நிரம்பும் ஏரிகள்: தீவிர கண்காணிப்பில் பொதுப்பணித்துறை

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் கொண்டங்கி, தையூர், சிறுதாவூர், மானாம்பதி, ஆமூர், செம்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள ஏரிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக தையூர் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. இருப்பினும் சீரான அளவில் உபரி நீர் வெளியேறுவதால் பாதிப்பு எதுவும் இதுவரை ஏற்படவில்லை. கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சிறுதாவூர், ஆமூர், கொண்டங்கி ஏரிகள் நிரம்பி விட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்றாக கொண்டங்கி ஏரி விளங்குகிறது.

இந்த ஏரியின் மூலம் கொண்டங்கி, மேலையூர், நந்தம்பாக்கம், வெங்கூர், நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்டே்டை, கீழூர், கொட்டமேடு, மடையத்தூர், மயிலை, செம்பாக்கம் ஆகிய கிராம ஏரிகளுக்கு நீர் செல்கிறது. இதன் மூலம் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், திருப்போரூர் பேரூராட்சி பகுதிக்கும் கொண்டங்கி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து குடிநீர் செல்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கொண்டங்கி ஏரி ஆக்கிரமிப்பு காரணமாக நீர் நிரம்பாத நிலை ஏற்பட்டது.

கொண்டங்கி ஏரிப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஏரிக்கரையை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு 71 லட்சம் ரூபாய் செலவில் ஏரிக்கரையை பலப்படுத்துதல், மதகு, கலங்கல் சீரமைத்தல், நீர்வரத்துக் கால்வாய்கள் தூர் வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக கொண்டங்கி ஏரி முழுவதும் நீர் நிரம்பி கொண்டங்கி ஏரியின் கலங்கல் வழியாக உபரி நீர் அருவி போல் வெளியேறி வருகிறது. விடுமுறை தினமான நேற்று ஏராளமானோர் அந்த ஏரியின் உபரி நீரில் குளித்து மகிழ்ந்தனர். இதற்காக அப்பகுதியில் ஏராளமான தின்பண்ட கடைகள் போடப்பட்டிருந்தன. பொதுப்பணித்துறையின் தொடர் கண்காணிப்பு காரணமாக இதுவரை ஏரியின் உபரி நீர் வெளியேற்றம் காரணமாக கிராமங்களில் எந்த வெள்ள பாதிப்பும் ஏற்படவில்லை.

Related Stories: