×

கொடநாடு கொலை வழக்கு: தனபால், ரமேஷ் காவல் முடிந்தது..! மீண்டும் சிறையில் அடைப்பு

குன்னூர்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபாலிடம் 11 நாட்களும் உறவினர் ரமேசுக்கு 10 நாட்களும் போலீஸ் காவல் முடிந்த நிலையில், குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை, கொள்ளை வழக்கிற்கு மூல காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் விபத்தில் உயிரிழந்தார். இவ்வழக்கையும் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் உறவினரான ரமேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

அப்போது கொடநாடு கொள்ளை சதி திட்டம் குறித்து தனபாலுக்கு தெரிந்திருந்த நிலையில், போலீஸ் விசாரணையின்போது தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது தொடர்பாக தனிப்படை போலீசார் தனபால் மற்றும் ரமேஷை கடந்த 25ம்தேதி கைது செய்து கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். இவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். கனகராஜின் அண்ணன் தனபாலிடம் 11 நாட்களும், ரமேஷிடம் 10 நாட்களும் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், குன்னூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் நேற்று அவர்கள் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். நடுவர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் இருவரையும் கூடலூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் கூடலூர் கிளை சிறைக்கு அழைத்து சென்றனர்.



Tags : Kodanadu ,Danapal ,Ramesh , Kodanadu murder case: Danapal, Ramesh custody is over ..! Back to jail closure
× RELATED அண்ணாமலை மீது வழக்கு