×

பலத்த மழையால் தரைப்பாலம் ‘டேமேஜ்’ திருமங்கலம்-சேடபட்டி இடையே போக்குவரத்து துண்டிப்பு

திருமங்கலம்: நேற்றிரவு பெய்த பலத்த மழையால் திருமங்கலம்-சேடபட்டி ரோட்டில் திரளி அருகே அமைக்கப்பட்டு வரும் தரைப்பாலத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. திருமங்கலத்திலிருந்து திரளி, சவுடார்பட்டி வழியாக சேடபட்டிக்கு செல்லும் ரோட்டில் திரளி அருகே புதிதாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாற்றுப்பாதை இந்த தரைப்பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்தது. திருமங்கலத்திலிருந்து சேடபட்டி, எம்.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த மார்க்கத்தில் பஸ்கள், ஆட்டோ, பள்ளி கல்லூரி வாகனங்கள், மில் தொழிலாளிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில், நேற்று இரவு பெய்த பலத்த மழையால் இந்த மாற்றுப்பாதையில் அரிப்பு ஏற்பட்டு பலத்த சேதமடைந்தது. பாலத்தின் வழியாக தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேற்று இரவு முதல் இந்த ரோட்டில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சவுடார்பட்டி, கிழவனேரி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வலையபட்டி, சித்துரெட்டியபட்டி, அலப்பலச்சேரி, டி.புதுப்பட்டி வழியாக சுமார் 20 கி.மீ சுற்றி திருமங்கலம் வர வேண்டியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirumangalam-Chetapatti , Ground bridge ‘Damage’ due to heavy rain disrupts traffic between Thirumangalam-Chetapatti
× RELATED மழைநீரால் மூழ்கும் மாற்றுப்பாதை:...