×

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோமாரி நோயால் 1 லட்சம் பசுமாடுகள், காளைகள் பாதிப்பு: தடுப்பூசி இல்லாததால் தொற்று அதிகரிப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று ஏற்பட்டு சுமார் ஒரு லட்சம் மாடுகள் நோயால் பாதித்துள்ளன. தடுப்பூசி இல்லாததால் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, மாதனூர், ஆலங்காயம் ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இந்த கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் பொதுமக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், சுமார் 1.8 லட்சம்  மாடுகள், பசுமாடுகள் உள்ளது.  இதனால், மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவமனைகள் சுமார் 34 இடங்களில் இயங்கி வருகிறது. ஆனால், பற்றாக்குறை காரணமாக 34 மருத்துவர்களுக்கு பதிலாக 10 கால்நடை மருத்துவர் மட்டுமே உள்ளனர். இதன்காரணமாக, கிராமப் பகுதிகளுக்கு மருத்துவர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழைக்காலம் தொடங்கிய நாளிலிருந்து மாடுகளுக்கு கோமாரி நோய் எனப்படும் நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக பசு மாட்டுக்கும் காளை மாடுகளுக்கும் பரவி கால், வாய், நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் புண் ஏற்படுகிறது. இதனால் பசுமாடுகள் சோர்வடைந்து பட்டினியால் இறந்து விடுகின்றது. இந்த கோமாரி நோய்த் தொற்றைத் தடுக்க வருடத்திற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டு காலமாக தடுப்பூசி அரசிடமிருந்து வராத காரணத்தினால் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது. அதனால், தொற்று அதிகரித்து வருகிறது. இதுபற்றி கால்நடை டாக்டர்களிடம் கேட்டால், ‘அரசிடம் இருந்து மருந்து எங்களுக்கு வரவில்லை. ஆகையால் நாங்கள் சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

இந்தநிலையில்தான், நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக மாதனூர், ஆம்பூர் மற்றும் கந்திலி ஆகிய பகுதிகளில் அதிகளவில் பரவுகிறது. இப்படியாக, மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் பசு மாடுகள், காளைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள்  உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்றால் பாதித்த மாடுகளிடம் கன்று குட்டிகள் பால் குடிக்கும்போது அந்த நோய் தொற்று பரவி கன்று குட்டிகளும் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, ஆயிரக்கணக்கில்  பசு மாட்டை வாங்கி பால் கறந்து தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்று பால் வியாபாரம் செய்பவர்கள் கவலையில் உள்ளனர். அதனால், உடனடியாக தமிழக அரசிடம் மாவட்ட நிர்வாகம் எடுத்துரைத்து தேவையான கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைவில் வாங்கி மாடுகளுக்கு செலுத்தி உயிரை காப்பாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே, கால்நடைகள் மீது  நோய் தாக்குதல் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து வருகிறது. இதனால், உயிரிழக்கும் மாடுகளை பலர் உரிய வகையில் அப்புறப்படுத்தாமல் சாலையோரத்தில் வீசப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த மாட்டின் சடலம் வீசப்பட்டுள்ள அரங்கல் துருகம் ஊராட்சியில் உள்ள  மத்தூர் கொல்லை சாலையீல் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதுபோன்று வீசுவதையும் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். கோமாரி நோய் தடுப்பூசி ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாடுகளுக்கு செலுத்தப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் 2 வருடமாக தடுப்பூசி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய் தொற்று பரவி வருகிறது.

அம்மை நோய் பாதிப்பா?

ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சில வாரங்களாக கால்நடைகளுக்கு ஒருவித நோய் தாக்கி வருகிறது. கால்நடைகளின் வாய், மூக்கு, கால், மடி ஆகிய இடங்களில் கொப்பளங்கள் தோன்றி புண்கள் ஏற்படுகிறது. எனவே கால்நடைகளுக்கு அம்மை நோய் உருவாகி இருக்கலாம் என்று விவசாயிகள் கருதுகின்றனர். இதை உறுதிபடுத்தும் வகையில், நேற்று காலை பெரியவரிக்கத்தை சேர்ந்த நடராஜ், சின்னராஜ் ஆகியோருக்கு சொந்தமான பசு மாடு மற்றும் கன்று குட்டி உயிரிழந்தது. இது விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், மாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க கால்நடை பராமரிப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

‘தினகரன் செய்தியால்’ கால்நடைகளுக்கு சிகிச்சை

மாவட்டத்தில் கால்நடைகள் அம்மை நோயால் பாதிக்கப்படுவதாக ‘‘தினகரன்’’ நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து பெரியவரிக்கத்தில்  டாக்டர் ரமேஷ் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி அருகே நடந்த இந்த சிறப்பு முகாமில் 100-க்கு மேற்பட்ட கறவை மற்றும் காளை மாடுகள், கன்றுகள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags : Tirupathur , 1 lakh cows and bulls affected by syphilis in Tirupati district: Infection increase due to lack of vaccine
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...