×

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை; வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை; ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் மேலும் 3 மணி நேரத்திற்குக் கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை தி.நகர் ரங்கநாதன் தெருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் மின்சாரவாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர்  தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தமிழக கடற்கரை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமா தமிழகத்தில் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் இருபுறமும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சென்னையில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் 2 பக்கங்களும் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

வடபழனி, அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரமாக பயணிகள் மின்சார ரயிலிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



Tags : Vidya Vidya ,Chennai ,Meteorological Center , Heavy rain, floods, Chennai, Red Alert
× RELATED திருச்சியில் சிக்கிய ரூ.1 கோடி அதிமுக...