தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் எதிரொலி 90 அணைகளில் 191.7 டிஎம்சி நீர் இருப்பு: அணைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக். 26ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 84.91 டிஎம்சியாகவும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையில் 31.5 டிஎம்சியாகவும், 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 3.82 டிஎம்சியாகவும், 10.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில் 6.74 டிஎம்சியாகவும், 6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 4.8 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 5.10 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 2.53 டிஎம்சியாகவும், 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 3.71 டிஎம்சியாகவும், 2.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 2.52 டிஎம்சியாகவும், 1.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 1.58 டிஎம்சியாகவும், 7.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் 3.39 டிஎம்சியாகவும், 5.04 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில் 5.08 டிஎம்சியாகவும், 13.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 13.18 டிஎம்சியாகவும், 3.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 3.78 டிஎம்சியாகவும், 1.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 1.53 டிஎம்சி என மொத்தம் 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 90 அணைகளில் 191.76 டிஎம்சியாக உள்ளது. தற்போது 81.65 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில், தற்போது வரை வாணியாறு, கிருஷ்ணகிரி, பாம்பாறு, குப்பநத்தம், ஆண்டியப்பனூர் ஓடை, மோர்தானா, கடனா, குண்டாறு, கருப்பாநதி, அடவிநயினார் கோயில், கொடுமுடியாறு, பொய்கையாறு, மாம்பழத்துறையாறு, சோத்துப்பாறை, சாஸ்தா கோயில், வரட்டுப்பள்ளம் உட்பட 30 அணைகள் நிரம்பியுள்ள நிலையில், அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால், பெரும்பாலான அணைகள் ஓரிரு நாளில் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், அணைகளை 24 மணி நேரம் தீவிரமாக கண்காணிக்க முதன்மை தலைமை பொறியார் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அணைகளை செயற்பொறியாளர்களே முடிவு செய்து திறக்கலாம் என்றும், 5 அடிக்கு குறைவாகவே நீரை தேக்கி வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறித்து 2 மணி நேரம் முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அரசுக்கு அறிக்கை தர வேண்டும் என்று அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் ராஜேந்திரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories:

More