பொதுப்பணி, நீர்வளத்துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த பொறியாளர்கள் பட்டியல் வெளியீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொதுப்பணி, நீர்வளத்துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்த பொறியாளர்கள் பட்டியலை தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ளார். மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில் பொறியாளர்கள் நியமனம் செய்யப்படுகி்னறனர். தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு, நீர்வளப்பிரிவு 2 பிரிவுகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கும் வகையில், நீர்வளத்துறைக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் மருத்துவ கட்டுமான பணிகளை கவனித்து வருகிறது. தொடர்ந்து 2 துறைகளாக செயல்பட்டாலும், நிர்வாக ரீதியாக பிரிக்க வேண்டிய நிலை இருந்தது.

அதன்படி தற்போது அதிகாரப்பூர்வமாக இரண்டாக பிரித்து அதற்கான புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு 6 தலைமை பொறியாளர் பணியிடங்களும், கண்காணிப்பு பொறியாளர் 16 பணியிடங்களும், செயற்பொறியாளர் 72 பணியிடங்களும், உதவி செயற்பொறியாளர் 252ம், உதவி பொறியாளர் 730 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று, நீர்வளத்துறையில் தலைமை பொறியாளர் 14ம், கண்காணிப்பு பொறியாளர் 38ம், செயற்பொறியாளர் 154ம், உதவி செயற்பொறியாளர் 537ம், உதவி பொறியாளர் 1551 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தபொதுப்பணித்துறை, நீர்வளத்துறையில் பணியிடங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களிடம் துறை தலைமை மூலம் கடிதம் பெறப்பட்டன. இந்த கடிதத்தின் விவரங்களை பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ளார்.

அதன்படி நீர்வளத்துறையில் 13 பேர் தலைமை பொறியாளருக்கும், 20 கண்காணிப்பு பொறியாளர்களும், செயற்பொறியாளர்கள் 147 பேரும், உதவி செயற்பொறியாளர் 217 பேரும், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் 242 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதே போன்று பொதுப்பணித்துறைக்கு 6 பேர் தலைமை பொறியாளருக்கும், கண்காணிப்பு பொறியாளர் 8 பேரும், செயற்பொறியாளர் 60 பேரும், உதவி செயற்பொறியாளர் 72 பேரும், உதவி பொறியாளர் 144 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட மண்டலம், தரக்கட்டுபாட்டு பிரிவு கோட்டம், உப கோட்ட பணியிடங்களில் உதவி பொறியாளர்களை தேர்வு நடத்தியும், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பபடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

More