×

இலவச காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை விறகு அடுப்புக்கு மாறிய 42 சதவீத ஏழை மக்கள்: மோடி மீது ராகுல் தாக்கு

புதுடெல்லி: `காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மோடியின் வளர்ச்சி வாகனம் பின்னோக்கி செல்கிறது,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். நாட்டில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வர்த்தகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.266 உயர்த்தப்பட்டு, ரூ.2000.50 ஆக விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் ரூ.915க்கு விற்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சிலிண்டர் விலை இரட்டிப்பாகி உள்ளது.

இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்கிய இலவச காஸ் இணைப்புக்கு மறுமுறை சிலிண்டர் வாங்க முடியாமல் 42 சதவீத ஏழை குடும்பத்தினர் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறிவருவதாக நாளேடுகளில் செய்தி வெளியானது. இது தொடர்பாக ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `ஒன்றிய அரசின் வளர்ச்சி என்பது வெற்று வார்த்தையாகி விட்டது. அரசின் பேச்சுக்கும் செயலுக்கும் பல மைல் தூரம் இடைவெளி இருக்கிறது. காஸ் விலை உயர்வால் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்புக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டனர். மோடியின் வளர்ச்சி வாகனம் பின்னோக்கி செல்கிறது, `பிரேக்கும் பிடிக்காமல் செயலிழந்து விட்டது,’ என கூறியுள்ளார். மேலும், நாளேடு செய்தியை இணைத்து `விலைவாசி உயர்வு’ என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.

* `பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்’
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஆண்டறிக்கையில், இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தில் 4.5 கி.மீ. தூரத்துக்கு சீனப்படை ஊடுருவி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை சுட்டிக் காட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா நேற்று கூறுகையில், ``சீனாவுக்கு நற்சான்றிதழ் கொடுத்தது இந்திய வரலாற்றில் கருப்பு அத்தியாயம். உலகம் முழுவதும் சீனா அதை பயன்படுத்திக் கொண்டது. அந்த தைரியத்தில் தான், அருணாச்சலில் மட்டுமல்ல, லடாக், உத்தரக்காண்டிலும் கூட சீனப்படைகள் ஊடுருவி நாட்டின் கட்டமைப்பை சீர்குலைக்கிறது. சீனாவுக்கு கொடுத்த நற்சான்றிதழை திரும்ப பெறுவதுடன், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Rahul Tak ,Modi , Free gas cylinder not available 42% of poor people who have switched to wood stoves: Rahul attacks Modi
× RELATED மோடி அரசால் சீரழிக்கப்பட்ட...