×

8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: வார்னர், மார்ஷ் அதிரடி

அபுதாபி: நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில் (பிரிவு 1), ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன் குவித்தது. கேப்டன் போலார்டு அதிகபட்சமாக 44 ரன் (31 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), எவின் லூயிஸ் 29, ஹெட்மயர் 27, ரஸ்ஸல் 18* ரன் எடுத்தனர். இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற கிறிஸ் கேல் 15 ரன் (9 பந்து, 2 சிக்சர்), டுவைன் பிராவோ 10 ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஜோஷ் ஹேசல்வுட் 4 ஓவரில் 39 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டார்க், கம்மின்ஸ், ஸம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கேப்டன் பிஞ்ச் 9 ரன்னில் வெளியேற, டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 124 ரன் சேர்த்து அசத்தியது. மார்ஷ் 53 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கேல் பந்துவீச்சில் ஹோல்டர் வசம் பிடிபட்டார். ஆஸ்திரேலியா 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து அபாரமாக வென்றது. வார்னர் 89 ரன் (56 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), மேக்ஸ்வெல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வார்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Tags : Australia ,West Indies ,Warner ,Marsh Action , Australia beat West Indies by 8 wickets: Warner, Marsh Action
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...