நிர்வாணமாக அடுத்தவர் வீட்டில் புகுந்த அதிமுக முன்னாள் எம்பியை தாக்கியவர் கைது: மாஜிக்கு மூக்கில் ஆபரேஷன்

குன்னூர்: நீலகிரி மாவட்ட முன்னாள் அதிமுக எம்.பி. போதையில் அடுத்த வீட்டிற்குள் நிர்வாணமாக நின்ற விவகாரத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நீலகிரி தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி.  கோபால கிருஷ்ணன். இவர் ஊட்டி நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.  தீபாவளி பண்டிகையையொட்டி முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மது போதையில் முத்தாளம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். ஆத்திரம் அடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் அவரை  சரமாரியாக தாக்கினார்.

பின்னர் முன்னாள் எம்.பி. நிர்வாணமாக இருப்பதை வீடியோ பதிவு செய்தனர். குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து கோபாலகிருஷ்ணன், தன்னை சிலர் தாக்கியதாக கூறி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். இது குறித்து இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்திய போலீசார் அடுத்தவர் வீட்டிற்குள் நிர்வாணமாக இருந்த முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி என்பவர்  மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.  

முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் மீது தகாத வார்த்தைகளால் திட்டியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து முன்னாள் எம்.பி.யை தாக்கிய கோபியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தாக்குதல் காரணமாக அதிமுக மாஜி எம்.பி.க்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மூக்கில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More