‘டம்மி’ பதவியால் விரக்தி பாஜ மாவட்ட செயலாளரின் பேஸ்புக்கில் ஆபாச பதிவு: திருச்சி பெண் நிர்வாகி கைது

திருச்சி: தனக்கு டம்மி பதவி வழங்கப்பட்ட விரக்தியில் மாவட்ட செயலாளர் பேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி பாஜ பெண் நிர்வாகி பற்றி ஆபாச பதிவு செய்த திருச்சி பாஜ பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருச்சி தில்லைநகரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (45). பாஜக மாநகர மாவட்ட செயலாளர். இவரது பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து போலி பேஸ்புக் ஐடி உருவாக்கி அதில் ஆபாசமான தகவல்கள் பதிவிடப்பட்டு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காளீஸ்வரன், கடந்த மாதம் 19ம் தேதி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், காளீஸ்வரன் பேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி தவறான தகவல்களை பதிவிட்டது திருச்சி கருமண்டபம் விஷ்வாஸ் நகரை சேர்ந்த திலகா சிவமூர்த்தி (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் திலகாவை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில்  கூறப்படுவதாவது: பிபிஏ பட்டதாரியான திலகா, திருச்சி மாவட்ட பாஜக விவசாய அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவரது கணவர் சிவமூர்த்தி வெளிநாடு சென்று திரும்பியவர். திலகா தனது வீட்டையொட்டி, காளி கோயில் கட்டி பூஜை செய்து  வருகிறார்.

கோயில் மற்றும் பூஜை பற்றி அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடுவார். இந்த கோயிலுக்கு வந்து பூஜை செய்தால் கடன் பிரச்னை தீரும், பணம் பெருகும், கஷ்டங்கள் தீரும் என பல்வேறு பதிவுகளை பதிவிட்டுள்ளார். திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள கல்லணை பகுதியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவருக்கு  கட்சியில் மாநில பொறுப்பு கிடைக்க போவதாக கூறப்படுகிறது. தற்போது புறநகர் மாவட்ட செயலாளராக உள்ள அந்த பெண் நிர்வாகி, ரயில்வே செனட் உறுப்பினராகவும்  உள்ளார். தனக்கு டம்மியான பதவியை கொடுத்து விட்டு புறநகர் மாவட்ட செயலாளருக்கு மாநில பொறுப்பு வழங்கப்படுவது திலகாவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதற்கு பாஜக மாநகர மாவட்ட செயலாளர் காளீஸ்வரன், மாநில  பொது செயலாளர் கேசவன், நிர்வாகி தாளக்குடி விஜய் ஆகியோர் தான் காரணம் என நினைத்தார். இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக காளீஸ்வரன் உள்ளிட்ட  நிர்வாகிகளின் பேஸ்புக்கில் தனித்தனி போலி கணக்கு துவங்கியுள்ளார். அதில் காளீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், புறநகர் மாவட்ட செயலாளரான பெண்ணுடன் இருப்பது போன்ற போலியான புகைப்படத்தை உருவாக்கி அதை அவர்களே பதிவிட்டது போல் ஆபாசமாக பதிவிட்டுள்ளார்.  மேலும் புறநகர் மாவட்ட செயலாளரான பெண் பற்றி ஆபாசமாக எழுதி அதை  சம்பந்தப்பட்ட நபர்களே பதிவிட்டது போல் பதிவிட்டுள்ளார்.

மாநில செயலாளர் கேசவன் புகைப்படத்துடன் ஒரு பெண் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். கலைவாணி என்ற பெயரில் போலி பேஸ்புக்கில், சுசீலா குமார் என்பவரின் செல்போன் எண்ணை பதிவிட்டு வீடியோ காலுக்கு ரூ.500, ஆடியோ காலுக்கு ரூ.200 என பதிவிட்டுள்ளார். பேஸ்புக்கில் பதிவிட திலகாவுக்கு, தூத்துக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவிமுத்துகுமரன் (45) உதவியாக இருந்ததும் தெரியவந்தது என்றனர். இதை தொடர்ந்து ரவிமுத்துக்குமரனையும் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பதவிக்காக ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் தற்போது பேஸ்புக் வரை வந்துள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* காளி பூஜையால் பழக்கம்

பேஸ்புக்கை ஹேக் செய்து போலி கணக்கு தொடங்கி ஆபாசமாக பதிவிட திலகாவுக்கு, உதவி செய்த ரவி முத்துகுமரன், தனது உறவினருக்கு ரூ.6 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அதை அவர் திருப்பி தரவில்லை. கடன் திரும்பி வர, காளிகோவில் நடத்தி வரும் திலகாவை நாடினார். அவரும் கோயிலில் பூஜை செய்துள்ளார். அப்போது பழக்கம் ஏற்பட்டு நன்றி கடனாக திலகாவிற்கு போலி பேஸ்புக் கணக்கு தொடங்க உதவி செய்ததாக கூறியுள்ளார்.

Related Stories:

More