×

திருப்பத்தூர் அடுத்த கந்திலி வட்டாரத்தில் 75 ஆண்டுகளாக மின்சார வெளிச்சத்தை பார்க்காத மக்கள்: பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் அவலம்; கவனிக்கப்படாத நாடோடிகளின் வாழ்க்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த கந்திலி வட்டாரத்தில் 75 ஆண்டுகளாக மின்சார வசதி கூட கிடைக்காமல், கவனிக்கப்படாத நடோடிகளாக வாழும் இருளர் இன மக்களின் குழந்தைகள், பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தனி தாலுகா என்ற அந்தஸ்துக்கு காத்திருக்கும் கந்திலி ஒன்றியத்தின் தலைநகராக கந்திலி ஊராட்சி உள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தனி காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட் பகுதி என்று சிறு நகரமாகவே கந்திலி ஊராட்சி உள்ளது. இங்குள்ள சின்னூர் பங்களா பகுதியில் இருளர் இன மக்கள் 200க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு புறம்போக்கு இடத்தில் குடிசைகள் கட்டி 75 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகின்றனர்.

நாடோடிகளான இவர்கள் பல இடங்களுக்கும் சென்று பாம்பு பிடிப்பது உட்பட சிறு, சிறு வேலைகளை செய்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அதேநேரத்தில் சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாக இவர்கள் வசிக்கும் பகுதிக்கு இன்னும் மின்சாரமே எட்டிப்பார்க்கவில்லை என்பதுதான் சோகம். அதனால் சிம்னி மண்ணெண்ணெய் விளக்குதான் இவர்களுக்கு வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. அதற்கான மண்ணெண்ணெய்யும் சரிவர கிடைப்பதில்லையாம்.
இதுதவிர குடிநீர், கழிவறை, தெருவிளக்கு என்று எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

எனவே இருளர் இனத்தை சேர்ந்த இவர்களது பிள்ளைகள் கல்வியுரிமை மறுக்கப்பட்டு பெற்றோருடன் அன்றாட பிழைப்புக்கு அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலரும் ஆரம்பக்கல்வியை கற்றாலும் அதன் பிறகு வாழ்வாதாரத்தை தேடும் நிலைக்கு தள்ளப்படுவதால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி 75 ஆண்டுகளாக மின்சார வெளிச்சத்தை பார்க்காமல், வாழ்ந்து வரும் அவலநிலைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து இருளர் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது: எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மலைகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளில் உள்ள கிழங்குகள் மற்றும் தேன், பாம்பு, வயல்வெளிகளில் உள்ள எலிகளை பிடித்து எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். மேலும், மலைப்பகுதிகள், வனப்பகுதிகளுக்கு செல்லும்போது, விஷப்பூச்சிகள், வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்த சூழலில் கந்திலி சின்னூர் பங்களா பகுதியில் நாங்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இதுவரை எங்கள் குடிசைக்கு மின்சார இணைப்பு வரவில்லை. இப்படியே 75 ஆண்டுகளாக பல தலைமுறைகளை கடந்து வாழ்ந்து வரும் எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.

மேலும், மின்வசதி இல்லாத காரணத்தினால், எங்கள் குழந்தைகள் படிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் இப்பகுதி முழுவதுமாக இருட்டில் மூழ்கிவிடுகிறது. மழைநீர் ஒழுகி இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து வாழ்ந்து வருகிறோம். எங்கள் இனத்தில் நன்கு படித்து பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் கனவு கண்டாலும் எங்கள் கனவு பலிக்குமா என்பது தெரியவில்லை. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சர் வீரமணியிடம் பலமுறை மனு அளித்தும், எங்களுக்கு என தனி இடம் ஒதுக்கி தராமலும்,  மின்சார வசதி உட்பட எந்த அடிப்படை வசதியையும் செய்து தரவில்லை. தமிழக முதல்வர் தற்போது ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் எங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு பசுமை வீடு, இந்திரா குடியிருப்பு, தொகுப்பு வீடு போன்றவற்றை கட்டித்தந்தும், எங்கள் குழந்தைகளின் கல்வியுரிமையை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* குடிநீருக்கு 3 கிலோ மீட்டர் தூரம் பயணம்
கந்திலி ஊராட்சியில் உள்ள இருளர் இன மக்களுக்கு வாக்குரிமை, ஆதார் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு சம்பந்தப்பட்ட சான்றுகள் அனைத்தும் இருந்தும், தற்போது தங்க வீடின்றி அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனர். தொடர்ந்து இவர்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக தினமும், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சின்னூர் மலையடிவார பகுதிக்கு சென்று, அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் பிடித்து தலைச்சுமையாக கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

Tags : Kandili ,Tirupati , People who have not seen electricity for 75 years in the Kandili area next to Tirupati: the tragedy of dropping out of school; Life of unnoticed nomads
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!