ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் மாத இறுதியில் அறிவிக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த மாதம் இறுதியில் அல்லது டிசம்பர் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலாளர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் ஏற்பாடுகள், வார்டு வரையறை உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கூட்டம் வருகிற 27ம் தேதி வரை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. மழை காலத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் 2வது அல்லது 3வது வாரம் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து டிசம்பர் மாத இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசும்போது, ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடத்திடும் வகையில் தேர்தல் பணிகளில் அனைத்து அதிகாரிகளும் ஈடுபட வேண்டும்.

தேர்தல் நன்னடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த முக்கிய பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தேர்தலின்போது சட்டம்-ஒழுங்கை காக்கும் வகையில் தொடர் கண்காணிப்பு பணிகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். நவம்பர் முதல் வாரம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’’ என்று கூறினார். அதன் அடிப்படையில் நேற்று சென்னை மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து மற்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது திமுக ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அதனால், விரைவில் அறிவிக்கப்பட உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலுல் திமுக கூட்டணி பெரிய அளவில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பிரகாசமாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது மாநகராட்சி மேயர் வேட்பாளரை நேர்முக தேர்தல் மூலம் தேர்வு செய்யலாமா அல்லது கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரை தேர்வு செய்யலாமா? என்பது குறித்து தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தி முடிவு செய்துள்ளது. இந்த முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தமிழக அரசின் முடிவு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது மேயர் தேர்வு முறை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories:

More