ஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலைய கட்டுமானத்தை தொடர வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் உள்ள இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள மஞ்சக்குட்டை ஊராட்சி, செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் அமைக்க 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கூட்டுறவுத்துறை அரசாணை பிறப்பித்தது. உயர் தொழிநுட்ப வசதிகளுடனான வகுப்பறைகள், கூட்ட அரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பயிற்சி மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் சில ஆய்வுகளுக்கு பிறகு 61 கோடியே 80 லட்சம் ரூபாயில் அமைப்பது என்று திட்டமிடப்பட்டு அதற்கான நிதியும் அரசால் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, பயிற்சி மையத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என்றும் மாநில அளவிலான பயிற்சி மையம் அமைப்பதை கைவிடலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 28ம் தேதி கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டார்.

 இந்த உத்தரவை ரத்து செய்து கொடைக்கானலில் தேசிய அளவிலான  பயிற்சி மையத்திற்கு பதிலாக, ஏற்காடில் திட்டமிடப்பட்ட மாநில அளவிலான மையத்தின் பணிகளை தொடர அரசுக்கு உத்தரவிடக்கோரி ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்காட்டில் பயிற்சி மையம் அமைக்காததால், மனுதாரர் எவ்வாறு பாதிக்கப்படுகிறார் என்பது குறித்த தகவல்களுடன் கூடுதல் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories:

More