×

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக 4 நாட்களுக்கு 17,719 சிறப்பு பஸ்கள் இயக்கம்: சென்னையில் இருந்து சென்ற 6 லட்சம் பேர் திரும்பவும் ஏற்பாடு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக 4 நாட்களுக்கு 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சென்ற 6 லட்சம் பேர் திரும்பவும் பிரத்தியேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட விசேஷ தினங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக எப்படியாவது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், நான்கு மாதங்களுக்கு முன்பே, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஒவ்வொரு ரயில்களிலும் 200க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். இதை தொடர்ந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதிலும் மக்கள் செல்ல அதிகம் ஆர்வம் காட்டினர். ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் மற்றும் கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிட்டவர்கள் என அனைவரும் இறுதியில் எதிர்பார்ப்பது பஸ்களை தான். இதனால், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் 1ம் தேதி, 2ம் தேதி, 3ம் தேதி  என 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதாவது, 3 நாட்களில் தினசரி இயக்கப்படும்  6,300 பஸ்களுடன், சென்னையில் இருந்து 3506 சிறப்பு பஸ்கள், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து  6734 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,540 பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. ஆம்னி பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மொத்தத்தில் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து மட்டும் ரயில் மற்றும் பஸ்கள் மூலமாக சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி முடித்து விட்டு, சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பஸ்களுக்கும் அரசின் போக்குவரத்து துறை ஏற்பாடு செய்திருந்தது. தீபாவளிக்கு முதல்நாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், 2 நாட்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். தீபாவளி முடிந்து மறுநாள் (5ம் தேதி) திரும்புபவர்கள் வசதிக்காக தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 643 சிறப்பு பஸ்கள், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 730 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

6ம் தேதி (நேற்று) தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 913 பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு செல்ல 900 பஸ்களும் இயக்கப்பட்டன. இன்று தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 1729 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 2180 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. நாளை தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன், சென்னைக்கு 1034 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1190 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. தீபாவளி முடித்து சொந்த ஊர்களுக்கு திரும்ப 5, 6, 7, 8ம் தேதி என மொத்தம் 17,719 பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறுகையில், ‘‘ தீபாவளியை முடித்து திரும்பும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் 17,719 பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் பஸ் புறப்படும் நேரத்தை ஒலிபெருக்கியில் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல் மையங்களும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.86 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. மக்கள் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேலும் சிறப்பு பஸ்களை இயக்கவும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தயாராக உள்ளது”  என்றார்.

Tags : Deepavali ,Chennai , 17,719 special buses for 4 days for Deepavali homecoming: 6 lakh return from Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...