திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை வேளாண் இயக்குனர் பார்வை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 28ம்தேதி முதல் இந்த மாதம் 3ம் தேதி வரையில் ஒரு வார காலத்திற்கு கன மழை பெய்தது. குறுவை சாகுபடியானது ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 330 ஏக்கரில் நடைபெற்று 90 சதவீத பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 10 சதவீத பயிர்கள் மழையின் காரணமாக அறுவடை நடைபெறாமல் போனது. மேலும் சம்பா சாகுபடியானது 2 லட்சத்து 30 ஆயிரத்து 905 ஏக்கரிலும், தாளடி பயிர் 89 ஆயிரத்து 45 ஏக்கர் என மொத்தம் 3 லட்சத்து 19 ஆயிரத்து 950 ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஒருவார கனமழையால், மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி மாலை வரையில் வேளாண் துறை அலுவலர்களின் கணக்கெடுப்புப்படி,  51 ஆயிரத்து 875 ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி, வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை நேற்று மாவட்டத்தில் மழை நீரால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பூர் மற்றும் வடகுடி பகுதியில் நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.  பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அலுவலர்கள் கணக்கெடுத்து வருவதாகவும், இதன் விபரம் அரசுக்கு தெரியப்படுத்தபடும் என்றும் இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார். ஆய்வின்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: